«

»


Print this Post

அரங்க மனிதன்-2


இந்தப்படத்தின் இன்னொரு வலிமையான கவியுருவகம் என்பது சுற்றிலும் உள்ள வாழ்க்கையின் மாயத்தோற்றத்தன்மை பற்றியது. ‘உலகமே நாடகமேடை, நாம் அனைவரும் நடிகர்கள்’ என்ற ஷேக்ஸ்பியர் வரி கிட்டத்தட்ட ஒரு தேய்வழக்கு போன்றது. ட்ரூமேன் அவனைச்சுற்றி ஒரு வாழ்க்கையைக் காண்கிறான். வழக்கம் போல அது தற்செயல்களின் ஆச்சரியங்கள் மூலம் முன்னகரக்கூடியது. நூற்றுக்கணக்கான புதிய சாத்தியங்களாக விரிந்துகொண்டே இருப்பது. ஆனால் சட்டென்று அவனுக்கு ஓர் ஐயம் வருகிறது, அது உண்மைதானா? அது ஒரு பெரும்புனைவுக்குள் நிகழக்கூடியதா? புனைகதையாசிரியன் எங்கோ இருந்துகொண்டிருக்கிறானா?

மிகத்தொன்மையான ஒரு ஐயம் இது. எல்லா சிந்தனைகளிலும் இந்த ஐயம் உள்ளது. இந்த தற்செயல்பிரவாகம் உண்மையில் திட்டமிட்ட ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டதா? இந்த வாழ்க்கை நிகழ்கிறதா நிகழ்த்தப்படுகிறதா? உதாரணமாக விஷ்ணுபுரம் நாவலின் அத்தனை முக்கியமான கதாபாத்திரங்களும் தாங்கள் ஒரு பெரும் புனைவுக்குள் உள்ள கதாபாத்திரங்கள் என்றும் படைப்பாளி எங்கோ இருக்கிறான் என்றும் உணர்ந்துகொண்டே இருக்கின்றன. முடிவற்ற அந்த விவாதத்தை ட்ரூமேன் ஷோ அளிக்கும் கட்டரங்கு என்ற உருவகம் மூலம் நாம் மீண்டும் உணர்கிறோம்.

இவையனைத்தும் மாயத்தோற்றங்களே, உண்மை வேறெங்கோ உள்ளது என்ற தத்துவ உருவகம் செமிட்டிக் சிந்தனைகளில் இல்லை. அவற்றைப் பொறுத்தவரை இந்த உலகம் என்பது மனிதனுக்காக கடவுளால் உருவாக்கி அளிக்கப்பட்ட உண்மை. இது பொய் அல்ல, ஆகவே இதில் இருந்து வெளியேறி அறிய வேண்டிய உண்மை உலகம் என்று ஏதும் இல்லை.

ஆனால் கிரேக்க மரபில் அப்படி அல்ல. பிளேட்டோவின் புகழ்பெற்ற குகை உருவகம் இங்கே நினைக்கத்தக்கது. சாக்ரடீஸ் கிளாக்கனுடன் நிகழ்த்திய உரையாடலில் பிளேட்டோவின் கூற்றாக இதைச் சொல்கிறார். ஒரு குகைக்குள் சிலர் வாழ்நாள்முழுக்க கைகால்கள் விலங்கிடப்பட்டு வாழ்கிறார்கள். குகைக்கு வெளியே நிகழ்வனவற்றின் நிழல்களை அவர்கள் அந்தச் சுவரில் கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறெதையும் கண்டதில்லை என்பதனால் அதுதான் அவர்களின் யதார்த்தம். அவர்களில் ஒருவன், அவனை தத்துவஞானி என்கிறார் பிளேட்டோ, வெளியே சென்று அந்நிழல்களுக்குரிய உண்மைக்காட்சியைக் கண்டு வந்து அவர்களுக்குச் சொல்லி அவர்களை விடுதலை செய்கிறான்.

இவை எதுவும் உண்மை அல்ல என்ற தரப்பு கிரேக்க சிந்தனையில் எப்போதும் இருந்துள்ளது. உண்மை என்பது இதற்கு அடியில் இன்னொரு வடிவில் இருக்கக்கூடும். ட்ரூமேன் ஷோ அளிக்கும் அந்த கட்டரங்கு போன்றதே நம் வாழ்க்கை என்றால், நாம் காணும் இந்த யதார்த்தம் பொய்யானது என்றால் நாம் எப்படி வெளியேறுவது என்ற வினாவை இப்படம் எழுப்புகிறது. ட்ரூமேன் அந்த வினாக்களுடன் அலைமோதும்போதெல்லாம் ‘தர்க்கபூர்வமான’ விடைகளுடன் மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவன் ஆழ்மனத்தின் ஐயத்தை அவர்களால் தீர்க்க முடியவில்லை.

இந்திய சிந்தனையில் இந்து,பௌத்த மதங்களில் உள்ள மாயாவாதம் இந்தப் படம் உருவாக்கும் சிந்தனைகளுடன் வெகுவாக இணைந்துகொள்ளக்கூடியது. வேதாந்தம் பல உருவகங்கள் மூலம் இதைச் சொல்ல முயல்கிறது. கனவு என்பது கனவு காணும்போது முழுமையான யதார்த்தம்தான். விழித்துக்கொண்டதும்தான் அது மாயை ஆகிறது. ஆகவே நாம் வாழும் இந்த யதார்த்ததில் இருந்து நாம் வெளியேறுவது வரை இது முழுமையான யதார்த்தமாகத் தோன்றுவதில் என்ன ஆச்சரியம் என்கிறது அது.

கயிற்றரவு என்ற உவமை. கயிறை பாம்பாக எண்ணும் மனநிலை இருப்பது வரை கயிறு பாம்பேதான். அதை கயிறோ என்ற ஐயம் கொள்ளும் கணம் முதல் மெல்லமெல்ல அது கயிறாக ஆகிறது. ட்ரூமேன் மனத்தில் ஐயம் முளைக்கும் வரை எல்லாமே சரிதான். அவன் ஒரு திட்டவட்டமான யதார்த்தத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். வேதாந்த்தத்தின் இந்தக் கருதுகோள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குச் சென்றபோது அங்கே அது கிரேக்க மாயாவாதத்துடன் இணைந்துகொண்டு பெரிய அளவில் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

ட்ரூமேன் ஷோ படத்துடன் ஒப்பிடவேண்டிய ஒரு படம் உள்ளது, ராஜீவ் அஞ்சல் இயக்கி 1997ல் வெளியான ’குரு’ என்ற படம். ஒரு தீவில் அத்தனை மனிதர்களுக்கும் பிறந்ததுமே கண்ணில் ஒரு செடியின் பால் ஊற்றப்படுகிறது. அவர்கள் குருடாக ஆகிறார்கள். அந்த பால் கண்டிப்பாக விடப்படவேண்டும் என்ற நம்பிக்கை ஒரு மதக்கொள்கையாக அங்கே உள்ளவர்களுக்கு இருக்கிறது.

அங்கே தற்செயலாக பார்வை உள்ள ரகுராமன் என்ற இளைஞன் சென்று சேர்கிறான். அவர்களிடம் தான் பார்க்கும் உலகைப்பற்றிச் சொல்கிறான். ஆனால் பார்வை என்ற கருத்தையே அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் சொல்வதை அவர்கள் கேட்க விரும்புவதும் இல்லை. மெதுவாக அவர்களில் ஐயத்தை உருவாக்குகிறான். அவர்கள் பார்வை பெறவும் உண்மையான உலகை பார்க்கவும் வைக்கிறான்.

குழப்பமான திரைக்கதை காரணமாக மையம் தவறிப்போன படம் ‘குரு’ ஆனால் அதன் கதைக்கரு ஆர்வமூட்டும் சிந்தனைகளை உருவாக்குவது. வாழ்ந்துகோண்டிருக்கும் உலகம் முற்றிலும் பொய்யானதாக இருப்பதை அதற்கு அப்பால் பிரம்மாண்டமான உண்மையுலகம் ஒன்று சூழ்ந்திருப்பதை அது சொல்கிறது. போத்தன்கோடு கருணாகர சுவாமிகளின் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப்படம் வேதாந்தக் கருத்தை முன்வைக்கக்கூடியது. நுண்ணிய தளத்தில் ட்ரூமேன் ஷோவுடன் இது ஒத்துப்போகிறது

மிக விரிவான தளத்தில் ட்ரூமேன் ஷோவுடன் ஒப்பிட்டுப்பேசவேண்டியவை மாட்ரிக்ஸ் வரிசை படங்கள். ட்ரூமேன்ஷோவின் வலுவான கிறித்தவ மெய்யியல் அடிப்படை இல்லாமல் மேலும் தெளிவாக கீழைச்சிந்தனை மரபின் மாயை என்னும் கருதுகோளுடன் உரையாடக்கூடிய படங்கள் அவை. ட்ரூமேன் ஷோவை விட இன்னமும் கவித்துவமும் நுட்பமும் கொண்டவை. ட்ரூமேன் ஷோ அதன் திரைக்கதை அமைப்பில் பல விடுபடல்களும் ஓட்டைகளும் கொண்டது. அந்தக்குறைகள் ஏதுமில்லாத கவித்துவமான ஆக்கங்கள் அவை.

வேதாந்த நோக்குக்கும் ட்ரூமேன் ஷோ காட்டும் அரங்கமெய்மைக் கருத்துக்கும் என்ன வேறுபாடு? ட்ரூமேன் ஷோவில் உண்மையான உலகம் வெளியே உள்ளது. ட்ரூமேன் தன் அறியாமை அல்லது களங்கமின்மையாலும் அவன் பிறந்த சூழலைக் கட்டுப்படுத்துபவர்களாலும் இணைந்து உருவாக்கப்பட்ட பொய்யான உலகில் வாழ்கிறான். பொய்யை உணர்ந்த பின் உண்மையை நோக்கிச் செல்ல அவனுக்கு தேவை சுயம்தான். நான் விரும்புகிறேன் என்ற இச்சை. அதை will என்று மேலைச்சிந்தனை மரபு சொல்கிறது.

வேதாந்த மரபைப் பொறுத்தவரை இந்த நனவு என்பது ஒரு கனவே. அது இன்னும் பெரிய ஒரு கனவுக்குள் உள்ளது. இந்தக் கனவில் இருந்து விழித்து அந்தக் கனவுக்குள்தான் எழ முடியும். கனவுகளின் அடுக்குகளாக செல்லும் இந்த இருத்தல் உணர்வு முழுமையாக அற்றுப்போகும்போதே உண்மை அறிதலாகிறது. ஆகவே ஒருவன் பொய்யில் இருந்து வெளியேறுவதில்லை. பொய்யின் திரைகளை ஒவ்வொன்றாக களைந்துகொண்டே இருக்கிறான், அவ்வளவுதான்.

*

இந்த தளத்தில் இருந்து நகர்ந்து ட்ரூமேன் ஷோவின் அரசியல் உள்ளடக்கத்தை நோக்கிச் செல்லமுடியும். ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 என்ற நாவல் 1949ல் வெளிவந்தது. க.நா.சு மொழியாக்கத்தில் தமிழிலும் வெளிவந்துள்ளது. [முத்தண்ணா] எதிர்கால உலகைச் சித்தரிக்கும் நாவல் இது. ஒரு முழுமையான சர்வாதிகார அரசு. எல்லா நலன்களும் முழுமையாகப்பேணப்படுகின்றன. அதிலிருந்து வெளியேறும் உரிமையைத்தவிர. அதில் ஐயம்கொண்டு அதை எதிர்க்க முயன்று வதைகளுக்கு ஆளாகி கடைசியில் அதற்கு அடிமையாகிறான் கதாநாயகனாகிய வின்ஸ்டன் ஸ்மித்.

இந்நாவல் உருவாக்கிய ஒருசொல்லாட்சி இப்போது மிகவும் பிரபலம். ’பெரியண்ணா’ [Big brother]. அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் சர்வாதிகாரி. தன் குடிமக்கள்மீது கருணை கொண்டவர் என்றும் அவர்களின் நலம் ஒன்றையே கருத்தில் கொண்டவர் என்றும் இடைவெளியிலலமல் அந்த அரசில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ‘ பெரியண்ணா உங்களை கவனிக்கிறார்’ என்ற வரி அங்கே அனைத்து ஒழுங்குகளையும் உருவாக்குகிறது.

உலகம் முழுக்க சர்வாதிகார அரசுகளின் ஒரு உருவகமாகவே இன்று பெரியண்ணா என்ற சொல் மாறிவிட்டிருக்கிறது. அடக்குமுறை அரசு, ஜனநாயகத்தையும் கருத்துரிமையையும் கட்டுபப்டுத்தியிருக்கும் ஓர் அரசுக்கு எதிரான போர் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இன்று உள்ளது. அதில் தத்துவச் சிக்கல் ஏதுமில்லை. ஆனால் இன்றைய உலகில் வேறு ஒருவகையான அரசு உள்ளது. அது அனைத்து உரிமைகளையும் அளிக்கிறது. அனைத்து வசதிகளையும் அளிக்கிறது. ஆனால் அவையெல்லாமே மாயைகள், நாடகங்கள்தான். இங்கும் பெரியண்ணா கவனித்துக்கொண்டிருக்கிறார். அவரது கட்டளைப்படியே ஒவ்வொன்றும் நிகழ்கிறது. ஆனால் அதை அறியாமல் இயல்பாக அனைத்தும் நிகழ்கிறது என்ற பிரமையுடன் நாம் வாழ்ந்துகொள்ளமுடியும்

ட்ரூமேன் ஷோ அவ்வகையில் அமெரிக்க சமூகத்தில் குறிப்புருவகமாக ஆகிறது என்றால் மிகையல்ல. அனைத்தும் தெளிவாக முன்னரே வரையறுக்கப்பட்ட ஒரு சுதந்திர நாடகம். ட்ரூமேன் எங்கும் போகலாம், எதையும் செய்யலாம். தொடுவான் வரை அவனுக்கு திறந்து கிடக்கிறது -அந்த தொடுவானம் ஒரு பெரிய கூண்டுக்குள் அடக்கம் அவ்வளவே. சிங்கப்பூர் தேசிய உயிர்க்காட்சி சாலையில் பிரம்மாண்டமான வலைக்கூரைக்குள் இயற்கையான காடு அமைத்து அதில் பறவைகளை விட்டிருக்கிறார்கள். காடுதான், ஆனால் மூடப்பட்டது. வானம்தான், ஆனால் செல்லமுடியாதது. என்னுடன் வந்த சிங்கப்பூர் எழுத்தாளர் சித்ரா ரமேஷ் சொன்னார், சிங்கப்பூர் சமூகத்தின் மிகச்சிறந்த உவமை இந்த பறவைகள்தான் என்று.

ட்ரூமேன் ஷோவின் அரசியல் என்றால் அது உருவாக்கும் கேள்விதான். ஒரு சராசரி அமெரிக்க குடிமகனுக்கு அச்சமூகம் உருவாக்கித்தரும் அத்தனை வசதிகளையும் உரிமைகளையும் அவை உண்மையா என்று சோதனை செய்யும் எல்லை வரைச் செல்லாமல் ஏற்றுக்கொண்டு அந்த அற்புதமான கட்டரங்கத்திற்குள் வாழ்வதா இல்லை கசப்பான உண்மைகளினால் ஆன வெளியுலகம் நோக்கி செல்வதா? சராசரி அமெரிக்கர்கள் அந்த நாடகத்தையே தேர்வுசெய்கிறார்கள். ட்ரூமேன் வெளியேறுகிறான்.

*

பிளேட்டோவின் உருவகத்திலும் சரி, குரு படத்தின் உருவகத்திலும் சரி மாயா உலகில் இருந்து மீட்டுக்கொண்டு செல்பவர் தத்துவஞானியான வழிகாட்டி அல்லது குரு. ஆனால் ட்ரூமேன் ஷோவில் அது ஒரு பெண். சில்வியா என்ற லாரன் அவனில் முதல் ஐயத்தின் விரிசலை உருவாக்குகிறாள். ஏதேன் தோட்டத்தை ஆதம் துறக்கச் செய்த ஏவாளின் சாயல் அவளுக்குக் கண்டிப்பாக உண்டு. அதே அளவில் தாந்தேயின் டிவைன் காமெடியில் மாயைகளில் இருந்து மீட்டு சொற்கத்தை நோக்கிக் கொண்டு செல்லும் பீட்ரிஸ் [Beatrice] தேவதையின் சாயலும் உண்டு.

இந்த படிமங்கள் ஒரு மேலைமனத்தில் இயல்பாகவே உறைகின்றன. மீட்புக்குக் கொண்டுசெல்பவள் ஏன் ஒரு பெண்ணாக இருக்கவேண்டும்? ஏனென்றால் மீண்டும் கிரேக்க மூலத்துக்கே செல்லவேண்டியிருக்கிறது. விவேகத்தின் தெய்வமான சோஃபியா ஒரு பெண். அறியாமையின் இருளுக்குள் அவள்தான் அறிவின் முதல்சுடருடன் வருகிறாள். சில்வியாவில் ட்ரூமேன் கொள்ளும் காதல் என்பது அவனை அவன் வாழும் மாய உலகிலிருந்து மீட்பதற்கான முதல் தொடக்கமாக அமைகிறது.

ட்ரூமேன் கதையுடன் வெகுவாக ஒத்துப்போகும் ஒரு கதை நம் மரபில் உள்ளது. மகரிஷியான விபாண்டகன் மேனகையில் தனக்குப் பிறத மகன் ரிஷ்யசிருங்கனை உலகின் தீமைகளான காம, குரோத, மோகங்கள் தீண்டாமல் வளர்க்கவேண்டுமென நினைக்கிறார். ஆகவே தன் தவ வலிமையால் காட்டுக்குள் அவனுக்கென ஒரு தனி உலகை உருவாக்குகிறார். அங்கே பெண்கள் இல்லை. குரூபிகள் இல்லை. எந்தவிதமான மனமாச்சரியங்களும் இல்லாத முனிவர்கள் மட்டுமே அங்கே வருகிறார்கள். அங்கே ரிஷ்யசிருங்கன் ஞானத்தையும் நன்மையையும் அழகையும் மட்டும் கண்டுகொண்டு வாழ்கிறான். அவனை பிறர் அணுகாமலிருக்கவும் அவன் வெளியேறாமலிருக்கவும் மலைகளை காவல்நிறுத்துகிறார்.

அங்கநாட்டில் பதினான்குவருடம் மழைபெய்யாமல் பெரும் பஞ்சம் வருகிறது. தூய முனிவன் ஒருவனின் காலடிபட்டால் பஞ்சம் திரும் என்று சோதிடர் கூறுகிறார்கள். அது ரிஷ்யசிருங்கந்தான் என்று அறிகிறார்கள். அங்கமன்னனாகிய லோமபாதன் தன் அவையில் இருந்த திறமையான தாசியை காட்டுக்கு அனுப்பி ரிஷ்யசிருங்கனுக்கு காமத்தை அறிமுகம் செய்கிறான். வெளியே ஒரு உலகம் இருப்பதை ரிஷ்யசிருங்கன் உணர்கிறான். அவன் அவளுடன் வருகிறான். அவன் காலடிபட்டதும் அங்கநாட்டில் மழை பொழிகிறது.

இக்கதையில் ரிஷ்யசிருங்கனை ‘வெளி’ உலகுக்குக் கொண்டுசெல்லும் தூண்டுதலாக இருப்பது பெண்ணே. ட்ரூமேன் தான் வாழும் மாய உலகில் இருந்து வெளியே காலடி எடுத்து வைக்கும்ப்போது அவன் தன் களங்கமின்மையை இழக்கிறான். களங்கமற்றவனாக இருப்பதறகான சௌகரியத்தை இழக்கிறான் என்று சொல்லலாம். ஒவ்வொரு சவாலையும் அவனே சந்திக்கும் பொறுப்பை அவன் தன் சுயவிருப்பத்தால் அடைகிறான். ரிஷ்யசிருங்கன் தப்பி ஓடுவது தன் தந்தையிடமிருந்து என்பதே அக்கதையை அழுத்தமுள்ள தொன்மமாக ஆக்குகிறது. தந்தை உருவாக்கியளித்த களங்கமில்லா உலகை உதறி அவன் தன் உலகை நோக்கிச் செல்கிறான். அதற்கு அவனுக்கு தூண்டுதலை அளிப்பது காமம். எக்காலமும் உலகமெங்கும் நிகழ்ந்துவரும் ஒரு வாழ்க்கை சித்திரம்தான் அது.

ட்ரூமேன் அவனுடைய படைப்பாளியைச் சந்திக்கும் கணம் எனக்கு ஏன் அத்தனை உத்வேகமூட்டியது என்று எண்ணிப்பார்த்தேன். என்னுடைய கடவுள் ஒருபோதும் இப்படி மேலிருந்து கீழே நோக்கி பேசும் ஆளுமை அல்ல. படத்தின் தொடக்கத்தில் திரையை நிரப்பி அவர் வந்து தன்னுடைய சாதனையைப்பற்றி பெருமிதம் கொள்கிறார். அடுத்தகணமே அந்த அமைப்பின் முக்கியமான பிழை ஒன்று நிகழ்கிறது. ஒரு அரங்கவிளக்கு கழன்று ட்ரூமேன் நடக்கும் சாலையில் விழுகிறது.

ஐயம் உருவான பின் ட்ரூமேன் காண்பதெல்லாம் அமைப்பின் பிழைகளையே. அந்த அமைப்பை அதை உருவாக்கியவர் அதன் சாத்தியங்களின் வழியாக உணரும்போது அவன் அதன் பிழைகளினூடாக அதை உணர்ந்துகொண்டிருக்கிறான். இதுவே அவர்கள் இருவருக்குமான முரண்பாடு. கடைசியில் அவர்கள் இருவரும் முகத்துடன் முகம் பார்த்து நிற்கும்போது எழுந்து வருவது அதுவே.

தன் குழந்தைக்கு ‘தேவையான’ அனைத்தையுமே ஏற்பாடு செய்துகொடுத்து, அவனை ஒவ்வொரு கணமும் பாதுகாத்து, அவன் வளர்ச்சியுடன் தானும் வாழும் அந்த படைப்பாளி எனக்கு ஒரு தந்தை என்றுதான் தோன்றியது. அதுவே என்னை படத்துடன் இணையச் செய்தது. அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை, தன் குழந்தைக்கு அவர் நன்மையைத்தான் செய்கிறார். ஒவ்வொரு தந்தையும் தன் குழந்தைக்கான பாதுகாப்பான, சவால்கள் அற்ற ஒரு இன்ப உலகை உருவாக்கி கையில் கொடுக்கவே விரும்புகிறார்

ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் தன் உலகம் அதற்கு வெளியே இருக்கிறது என்ற உணர்வுதான் உள்ளது. கூட்டுப்புழுவின் இனிய தவக்காலம் என்பது சிறகு முளைப்பதற்காகவே என அந்த தந்தை உணர்வதில்லை. சிறகு முளைத்ததும் அது ஒருகணம் கூட கூண்டுக்குள் இருக்க முடியாது. தன்னைச்சுற்றி தந்தை உருவாக்கியிருக்கும் உலகம் எத்தனை மகத்தானதாக இருந்தாலும் அதை சிறையாகவே அந்த மகன் எண்ணுவான். ஒரு அழகிய வணக்கத்தைச் சொல்லிவிட்டு ட்ரூமேன் வெளியேறும்போது நானும் மகிழ்ந்து கைதட்டியது அதனால்தான்.

இந்த தளத்தில் ட்ரூமேன்ஷோ ஒரு காஃப்கா கதையின் தளத்தை தொடுகிறது. தந்தை என்ற கருத்துருவில் இருந்து தப்புவதே காஃப்காவின் கதைமாந்தரின் கனவாக இருக்கிறது. அவர்களைச் சுற்றி உள்ள அனைத்துமே பலநூறு தலைமுறையாக நீண்டு வரும் தந்தையர் வரிசையால் உருவாக்கப்பட்டவை. கல்விநிலையம், தொழிற்கூடம், அரசாங்கம் அனைத்தும். ஆகவே அனைத்தில் இருந்தும் வெளியேற்றம் என்பதே காஃப்கா உருவாக்கும் உலகின் அடிபப்டை தாகம். காஃப்காவின் கதையின் வரி ‘இங்கிருந்து வெளியே அதுதான் முக்கியம் இங்கிருந்து வெளியே’ அந்த தாகமே ட்ரூமேனை அந்தக் கடைசி காலடியை எடுத்து வைக்கச் செய்தது

நவீனத்துவம் உலகில் புனைகதைகளை உருவாக்க ஆரம்பித்த காலம்முதலே இந்த வெளியேற்றம் வேறு வேறு வகைகளில் பேசப்பட்டிருக்கிறது. ’களங்கமின்மையின் அழிவு’ [Loss of innocence] ஐரோப்பிய இலக்கியத்தின் மிகமுக்கியமான கரு. அதற்கு ஏதேன் தோட்டத்து வெளியேற்றம் ஆழ்படிமமாக இருந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் நூற்றுக்கணக்கான நாவல்கள் திரைப்படங்கள் உள்ளன. ட்ரூமேன் ஷோ என் மனதில் அதில்தான் இணைந்து கொள்கிறது. படம் முழுக்க நாம் கண்டுகொண்டிருப்பது கள்ளமற்ற ட்ரூமேனின் முகத்தையும் இனிய சிரிப்பையும்தான். அவனது அழகிய அசட்டுத்தனங்களைத்தான் அத்தனைபேர் தொலைக்காட்சியில் ரசித்திருப்பார்கள். குழந்தை பாத்டப்பில் சோப்பு வைத்து விளையாடுவதைப் பார்த்து சிரிக்கும் பெரியவர்களைப்போல. சட்டென்று ட்ரூமேன் வளர்ந்து தந்தையை மீறி வெளியேறி அவர்களில் ஒருவன் ஆகிறான். அது தவிர்க்கமுடியாது என்பதனால்தான் ‘வா வந்துவிடு’ என அவர்கள் அழைக்கிறார்கள்

ட்ரூமேன் ஷோ வெளியேற்றத்தின் கதை. பலவகையான வெளியேற்றங்கள். தந்தையில் இருந்து. குழந்தைமையில் இருந்து. வாழவிதிக்கப்பட்ட சூழலில் இருந்து. அளிக்கப்பட்ட அனைத்திலும் இருந்து. படைப்பாளி இல்லாமல் வாழ முடிவெடுத்த படைப்பின் கதை அது. கடைசியில் ட்ரூமேன் இயக்குநரிடம் சொல்கிறான் ; ஒருவேளை நாம் இனிமேல் காணப்போவதில்லை என்றால் குட்மார்னிங் குட்பாஃடர்நூன் குட் நைட்’ குழந்தைத்தனமாக வீம்புடனும் மெல்லிய தயக்கத்துடனும் அவன் அந்த திறந்த வாய்க்குள் நுழைகிறான். எதிர்காலத்தின் வாய்.

ட்ரூமேன் வெளியேறி எங்கே செல்லப்போகிறான்? வெளியே இருப்பது அவன் இருந்ததை விட அதிபிரம்மாண்டமான ஒரு உலகம். யோசித்துப்பார்த்தால் அதுவும் செயற்கையானதே. இந்த உலகம் ஒரு தந்தைத்தனமான படைப்பாளியால் சில வருடங்களில் உருவாக்கப்பட்டதென்றால் அவன் வெளியெ சந்திக்கவிருக்கும் உலகம் அதேபோன்ற பலலட்சம் தந்தையரால் பல்லாயிரம் வருடங்களாக உருவாக்கப்பட்டது. ஆம், அதுவும் ஒரு கட்டரங்கம்தான். அங்கிருந்து ட்ரூமேன் வெளியேற முடியுமா?

மீண்டும் காஃப்காவின் வரி. ’பனி மூடி நிற்கும் ஓக் மரங்கள் மிக மென்மையானவை உடையக்கூடியவை என்று தோன்றுகின்றன. அது ஒரு மாயைத்தோற்றம், உள்ளே உறுதியான மரம் உள்ளது. அது மிகவலிமையானது. ஆனால் , கவனித்துப்பார்த்தால், அதுவும் கூட ஒரு மாயத்தோற்றமே’.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://do.jeyamohan.in/7633/

10 comments

1 ping

Skip to comment form

 1. சார்லஸ்

  //வேதாந்த மரபைப் பொறுத்தவரை இந்த நனவு என்பது ஒரு கனவே. அது இன்னும் பெரிய ஒரு கனவுக்குள் உள்ளது. இந்தக் கனவில் இருந்து விழித்து அந்தக் கனவுக்குள்தான் எழ முடியும். கனவுகளின் அடுக்குகளாக செல்லும்..// அப்படியே “இன்செப்ஷன்” படம் பற்றி எழுதியதுபோல் இருக்கிறது.
  பல்வேறு தகவல்களும் ஒப்பீடுகளும் கோணங்களும் நிறைந்த செறிவான அலசல்.
  காஃப்காவின் தளத்தோடு இணைத்தது முற்றிலும் எதிர்பாராததாகவும் புதுத் திறப்பாகவும் இருக்கிறது. நன்றி சார்.

 2. digitalaathma

  மாயையுள் மாயை யறியார்
  பெருமாயைச் சிறுமாயை யறியும்
  மாயைவெல்லப் பெருமாயைப் பற்றினோர்
  பெருமாயைப் பெருக்கிச் செல்வர்
  மாயைவிள(ல )க்கியோர் தென்பது மாயையே
  http://digitalaathma.blogspot.com/

  Thank you,
  Digital aathma

 3. down under

  Truman show in itself was a decent mainstream entertainer without
  getting too much trapped in the philosophical musings or layers.

  There is also another important aspect to this movie i.e our obsession with 24/7 non stop entertainment.Truman was meant to be the ultimate soap-cum- reality TV ever.The viewers collectively displace all their dreams,wishes, aspirations etc on Truman,Truman is created by them all.He is a “true figment” of their collective imagination
  When Truman walks out to face the “real” world he also ends up bringing the viewers down to earth.

  All the viewers, even though they enjoy their dreams being played out on the screen by Truman they also are aware that it is not real.There is this conflict between their escapisim and their knowledge that all is not real.

  In the end there is a collective relief in every single viewer that their escapist bubble is no more ,which is just a matter of time.

 4. ramalingamn

  இன்செப்ஷன் படமும் இந்த வகையை சேர்ந்ததுதான். நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

 5. mmurali

  அன்புள்ள ஜே,

  ஒருவேளை பிரம்மா விஷ்ணுவிடமிருந்து அவ்வாறுதான் வெளியே வந்திருப்பாரோ?

  தன வேலையை தொடங்குமுன், மாயையின் விஸ்தரிப்பை தரிசித்த பின் வேலையை (படைதலை) சிறப்பாக செய்யலமோ!

  முரளி

 6. shivatma

  master, talking about maya, in films, i request you to watch ‘samsara’ (20010) by Pan Nalin… there are some excellent scenes depicting vagaries of the flimsy human life…
  a must watch, ..i dont recollect you discussing about that film here.
  I request you to write about it too.
  Best regards.

  http://www.imdb.com/title/tt0196069/

  shivatma.

 7. santhana raj

  டியர் ஜெ
  “கனவு என்பது கனவு காணும்போது முழுமையான யதார்த்தம்தான். விழித்துக்கொண்டதும்தான் அது மாயை ஆகிறது. ஆகவே நாம் வாழும் இந்த யதார்த்ததில் இருந்து நாம் வெளியேறுவது வரை இது முழுமையான யதார்த்தமாகத் தோன்றுவதில் என்ன ஆச்சரியம்” அருமையான வரிகள்.
  இது எந்த வேதாந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது? அல்லது இது வேதாந்தத்தில் இருந்து உள்வாங்கப்பட்ட உங்கள் என்னமா?

 8. santhana raj

  டியர் ஜெ
  “கனவு என்பது கனவு காணும்போது முழுமையான யதார்த்தம்தான். விழித்துக்கொண்டதும்தான் அது மாயை ஆகிறது. ஆகவே நாம் வாழும் இந்த யதார்த்ததில் இருந்து நாம் வெளியேறுவது வரை இது முழுமையான யதார்த்தமாகத் தோன்றுவதில் என்ன ஆச்சரியம்” அருமையான வரிகள்.
  இது எந்த வேதாந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது? அல்லது இது வேதாந்தத்தில் இருந்து உள்வாங்கப்பட்ட உங்கள் எண்ணமா?

 9. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ.
  Trueman Show படம் பற்றியும் அதில் உள்ளீடாக இருக்கும் மேலை சிந்தனை முரண்களை பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். (முதல் பாகத்துக்கான கடிதம் எழுதுமுன் இரண்டாம் பாகமும் எழுதி விட்டீர்கள்.!!)

  இன்னும் சொல்லப்போனால் நம் கடவுளர்களின் அவதார நோக்கம் நிறைவேறிய பின் இவை எல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்ற உண்மையை கடைசியில் சொல்வது, சாப விமோசனம் இவை கூட இந்த வகையில் வரும் அல்லவா.
  உதாரணத்துக்கு ஹரிச்சந்திரன் மயானத்தில் மனைவியிடமே தட்சணை கேட்கும் நேரத்தில் எல்லா கடவுளர்களும் வந்து இது உனக்கான ‘சத்திய சோதனை’ என்று சொல்லி இறந்த அவன் மகனை உயிர்ப்பிக்கும் வரை , நடந்தவற்றை ‘இயக்கியது’ விஸ்வாமித்திரர் என்றும் சொல்லலாம் அல்லவா?

  என் அனுபவத்தில் பள்ளி நாட்களில் சோதனையான காலங்களில் (பரீட்சைக்கு படிக்க நேரும்போது, கிடைக்கப்போகும் தண்டனைகளை நினைத்து)
  இது வெறும் பிரம்மையோ , நாம் இருக்கும் இடம் தவிர மற்றவை கிடையாதோ , என்றெல்லாம் நினைப்பேன். நான் நடக்க நடக்க சாலை வளர்கிறதோ என்று பயத்துடன் கற்பனை செய்ததுண்டு.
  நிறைய பேர் அதுபோல் நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  Chandramohan Vetrivel,
  New Delhi.
  http://www.chandanaar.blogspot.com

 10. Rajan

  அன்புள்ள ஜெயமோகன்

  இதற்கும் சுஜாதாவின் அறிவியல் தொடர்பான கட்டுரைகளுக்கும் தொடர்பான ஒரு விஷயம் சயின்ஸ் சானலில் கடந்த சில மாதங்களாக வரும் த்ரு தி வோர்ம்ஸ் ஹோல் என்றொரு நிகழ்ச்சி. நடிகர் மார்கன் ஃப்ரிமேன் இந்த நிகழ்ச்சியை வழங்கினார். பிரபஞ்சத்தின் தோற்றம், கடவுள், உயிரினம் வாழும் கிரகங்கள், டார்க் ஹோல், டார்க் மேட்டர், பூமியில் உயிரனம் தோன்றிய விதம் என்று பல்வேறு விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தற்பொழுதைய கண்டு பிடிப்புகள் குறித்து மிக எளிமையாக விஞ்ஞானிகளைக் கொண்டே விவரிக்கிறார்கள். இந்தியாவில் இந்த சானல் காணக்கிட்டுமானால் அவசியம் பார்க்கவும் மீண்டும் மீண்டும் காண்பிக்கிறார்கள்.

  இந்தத் தொடரில் ஒரு வாரத்தில் கடவுள் பற்றி பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்புகள் குறித்து காண்பித்தார்கள். ஒரு விஞ்ஞானி கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டு பாதிரியாராகவே போய் விட்டார். பிரச்சினை தீர்ந்தது :)) ஆனால் பல விஞ்ஞானிகள் இன்னும் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் கடவுள் பருப்பொருள் என்னும் ஜிப்ஸ் பார்ட்டிக்கிளையும், டார்க் மேட்டரையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பல நேரங்களில் இவர்களின் யூகங்களே கண்டுபிடிப்புகளை விட அதிகமாக உள்ளது.

  ஒரு விஞ்ஞானி கடவுள் நமக்குள்ளேயே தான் இருக்கிறார் என்று ஆராய்ச்சி செய்து சொல்லுகிறார். நாம் சொல்லும் அஹம் ப்ரமாஸ்மி தத்துவம் எல்லாம் அல்ல. அவர் சொல்வது நம் மூளையின் ஒரு பகுதி ஒரு விதமான அலைகளால் தூண்டப் படும் பொழுது கடவுள் உணர்வுகள் நமக்குக் கிட்டுவதாகவும், இதுவரைக் கடவுளைக் கண்டவர்கள், கேட்டவர்கள் அனைவரும் அப்படித் தூண்டப் பட்டவர்களே என்கிறார். ஒரு பெண்ணை அழைத்து வந்து அவரது கருவியைப் பொருத்தி அந்தப் பெண்ணுக்கு கடவுளைக் காண்பித்தார்.

  அதே நிகழ்ச்சியில் இன்னும் ஒரு கலிஃபோர்னியாவின் கால்டெக் விஞ்ஞானி ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார். அதாவது நாம் எல்லாமே நம்மை விட பல மடங்கு மேலான அறிவுத் தளத்தில் உள்ள நம் எதிர்காலச் சந்ததியினரால் மிகவும் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களினால் உருவாக்கப் பட்ட சிமுலேஷன் காட்சிகளே என்கிறார். பார்க்க கேட்க்க சுவாரசியமாக இருந்தது. நாம் அனைவருமே ட்ருமென் ஷோவில் தான் இருக்கிறோம் யாரோ சிறுவர்கள் நம்மை எல்லாம் பாத்திரங்களாக உருவாக்கி வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்.

  இன்செப்ஷன் படமும் இதே தளத்துக்கு வருகிறது. அது பற்றி தனியாக எழுத வேண்டும்

  அன்புடன்
  ராஜன்

 1. Tweets that mention jeyamohan.in » Blog Archive » அரங்க மனிதன்-2 -- Topsy.com

  […] This post was mentioned on Twitter by kavirajan, சங்கமம். சங்கமம் said: அரங்க மனிதன்-2: இந்தப்படத்தின் இன்னொரு வலிமையான கவியுருவகம் என்பது சுற்றிலும் உள்ள வாழ்க்கையின் மாயத்தோற்றத்தன்மை … http://bit.ly/d9YeLi […]

Comments have been disabled.