«

»


Print this Post

நமது சினிமா ரசனை


சைதன்யாவிடம் ‘எந்தெந்த படங்கள்டி அப்பா பாக்கலாம்?’ என்று கேட்டு அவள் தேர்ந்து கொடுத்த படங்களை தினம் ஒன்றாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிகப்பழைய படங்கள், கொஞ்சம் பழையபடங்கள், புதுப்படங்கள் என ஒரு கலவை. படம் பார்ப்பதற்கான தூண்டுதலாக இருப்பது சமீபத்தில் வாங்கிய வீட்டரங்கு வசதிகொண்ட பெரியதிரை ஒளித்திரவத் தொலைக்காட்சி.

ஆனால் எனக்கு சினிமா எப்போதுமே முக்கியமான கலைவடிவம் அல்ல. ஈடுபாட்டுடன் தொடர்ந்து படம் பார்க்க என்னால் இயலாது. என்னுடைய ஈடுபாடு தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்ததே. அதிலும் சமீபமாக என்னை உள்ளிழுத்து அமரச்செய்யும் புனைவுகளை மிகக்குறைவாகவே வாசிக்க நேர்கிறது. ஆகவே மனம் அதிகமாக தத்துவம் நோக்கியே செல்கிறது. ‘ இப்ப என்ன வாசிக்கிறீங்க?’ என்று நேற்று ஒரு நண்பர் கேட்டார் ‘சி ஜி யுங் ஸிம்மருக்கு எழுதின கடிதங்களை…’ என்றேன். அவர் ஆச்சரியப்படாத நிலைக்கு முன்னரே அவரை ஆட்படுத்தியிருந்தேன். நடுநடுவே எனக்கொரு இளைப்பாறல் தேவைப்படுகிறது. அதற்கே சினிமா. சினிமா, அது எந்த மாபெரும் செவ்வியல் படைப்பாக இருந்தாலும், எனக்கு மேலோட்டமானதாகவே படுகிறது என்று சொன்னால் சட்டையைப்பிடிக்க வரும் பல நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்.

படங்கள் பார்த்ததுமே இணையத்தில் அதைப்பற்றி தேடி யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கிறேன். தமிழில் எல்லாரும் சினிமாக்களை நிறையப்பார்த்து விரிவாகப்பேசுவதனால்தான் இலக்கியம் அதிகம் பேசப்படுவதில்லை என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் இணையத்தில்வாசிக்கும்போது பொதுவாக ஏமாற்றமாகவே இருக்கிறது. உலகசினிமா பற்றிய இணையக்கட்டுரைகள் பெரும்பாலும் கதைச்சுருக்கம் சொல்லி, பார்த்த அனுபவத்தை இணைத்துக்கொண்டு, விக்கிபீடியாவில் இருந்து எடுத்த தகவல்களை தூவி எழுதப்படுவன. ஒரு விமரிசனம் வாசித்தபின் இன்னொன்றை வாசிக்கவேண்டியதே இல்லை. நமக்கு சினிமாவைப்பற்றி அரட்டை அடிக்க மட்டுமே தெரிகிறது.

பல ஆயிரம் கிலோமீட்டருக்கு இப்பால் இன்னொரு கண்டத்தில் இன்னொரு பண்பாட்டில் இருந்துகொண்டு படம்பார்க்கும் ஒருவரின் எதிர்வினை என்ன என்று காட்டும் விமர்சனங்கள் மிகமிக அபூர்வம். விதிவிலக்காக முக்கியமான விமரிசனங்கள் என நான் நினைப்பவை நீலகண்டன் அரவிந்தன் சொல்வனம் [ http://solvanam.com/ ] இதழில் எழுதும் விமரிசனங்கள். சுரேஷ் கண்ணன் பிச்சைப்பாத்திரம் தளத்தில் எழுதுபவை. [ http://pitchaipathiram.blogspot.com ]சார்லஸ் ஆண்டனி எழுத்பவை.[http://vaarthaikal.wordpress.com ]

அறிவுஜீவி பாவனையுடன் எழுதப்படும் பல ’அதீத’ விமரிசனங்களையும் வாசிப்பதுண்டு, சினிமாவை கொஞ்சம் தெரிந்தவர்கள் நகைச்சுவைக்காக அவற்றை வாசிக்கலாம். எண்பது தொண்ணுறுகளின் சினிமாக்கூட்டமைப்புகளின் காலத்திலேயே இத்தகைய மூளைச்சிலும்பல்கள் சகஜம். இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி நாவலில் டெல்லியில் அரசு குமாஸ்தாவாக இருக்கும் ஒரு ’சினிமா அறிவுஜீவி’யை வேடிக்கையாகச் சித்தரித்திருப்பார்.

பார்த்த உலகத்திரைப்படங்களை தமிழ்ப்படங்களுடன் ஒப்பிட்டு ’இதான்யா அது’ என்பதே அதிகமும் வாசிக்க நேரும் சினிமா பேச்சு. நான் நெடுங்காலமாகவே ’சினிமா பாரடைஸ்’ படத்தை ஒட்டி வசந்தபாலனின் ‘வெயில்’ எடுக்கப்பட்டிருக்கிறது என வாசித்து இருக்கும்போல என நம்பிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் சினிமா பாரடைஸ் படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. முற்றிலும் வேறு படம் இது. உண்மையிலேயே சினிமாபாரடைஸை நம்மவர்கள் இப்படித்தான் புரிந்துகொண்டார்களா?

வெயிலில் முருகேசன் ஒரு திரையரங்கில் பணியாற்றுகிறான், அந்த திரையரங்கு இடிக்கப்படுகிறது. அதேபோல ஒரு காலாவதியான கிராமத்திரையரங்கு சினிமா பாரடைஸில் வருகிறது. இவ்வளவுதான் ஒற்றுமை. ‘அதிலும் தியேட்டர் இதிலயும் தியேட்டர்’ என்ற அளவுக்குத்தான் நம்மவர்கள் உலகசினிமாவை புரிந்துகொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

வெயில் படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஏன் அதில் சினிமா வருகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். முருகேசன் காலாவதியான ஒரு மனிதன். ஆகவே காலவாதியான ஒரு தொழிலை அவன் செய்யவேண்டும். மக்களுக்கு அது காலாவதியானது என்று தெரிந்த, காட்சியாக காட்டக்கூடிய இயல்புகொண்ட இரு தொழில்கள் டூரிங் தியேட்டரும் கட்டை அச்சும். கட்டை அச்சு அச்சகம் ஏற்கனவே சேரனால் அவரது ’தவமாய் தவமிருந்து’ படத்தில் காட்டப்பட்டுவிட்டது. ஆகவே வேறு வழியில்லை. இந்தமாதிரி ‘மூலம்’ கண்டுபிடிப்பதில் ஒரு பெரும்படையே ஈடுபட்டிருக்கிறது. ஒரு படத்தின் கருவோ சில காட்சிகளோ இன்னொன்றுபோல் இருந்தால் ’அடிச்சுட்டான்யா’ என்ற உற்சாகம். ‘மூலத்தையே பார்த்தவன்யா நான்’ என்ற பெருமிதம்

கொஞ்ச காலத்துக்கு முன்னால் ஆர்.பி.சௌத்ரி உணர்ச்சிகரமான படங்களை எடுத்துக்கொண்டிருந்தார். அவரது ஒரு படத்தில் கதாநாயகன் கண்களை தானம்செய்வான். இன்னொன்றில் நாக்கை தானம் செய்வான். எல்லாமே வெற்றி. கடைசியாக எங்களூரைசேர்ந்த ஒருவர் கதாநாயகன் மொத்த உடலையுமே படிப்படியாக தானம்செய்வதாக ஒரு கதை பண்ணி போய்ச்சொன்னார். பிடி அட்வான்ஸ் என்றார் சௌத்ரி

நாஞ்சில் பி சி அன்பழகன் இயக்கிய காமராசு என்ற திரைப்படம் அவ்வாறாக உருப்பெற்றது. முரளி நடித்திருந்தார். கண் இதயம் கிட்னி உட்பட அனைத்து சமாச்சாரங்களையும் கதாநாயகன் கொடுத்துக்கொண்டே இருக்கிறான். ஒருவாரம் ஓடி அடங்கியது படம். சமீபத்தில் வில் ஸ்மித் நடித்த செவென் பவுண்ட்ஸ் என்ற படத்தை பார்த்தேன். அதே காமராசுவின் கதை. அதை நாம் திருட்டு என்று ஒரு மாறுதலுக்காக சொல்லிப்பார்க்கலாமே. சொல்லப்போனால் காமராசு செவென் பவுண்ட்ஸை விட கொஞ்சம் பரவாயில்லாமல்தான் இருந்தது.

இன்று உலகசினிமாவைப் பார்ப்பவர்களில் கணிசமானவர்கள் நேற்றைய செவ்வியல் சினிமாக்களில் பெரும்பாலானவற்றைப் பார்த்ததில்லை என்று தெரிகிறது. நான் சினிமாக்களை பார்த்த எண்பதுகளில் ஹங்கேரிய, செக்கோஸ்லாவாகிய சினிமாக்களே திரைக்கூட்டமைப்புகளில் அலைகளைக் கிளப்பின. அந்தப்படங்களில் பேசப்பட்ட பலவற்றின் மறு ஆக்கங்களே இன்றைய சினிமாக்கள். அது ஒரு தொடர் விவாதம். எந்த ஒரு நல்ல சினிமாவை எடுத்துக்கொண்டாலும் அதற்கு ஒரு முன்னோடி சினிமா இருக்கும். அதற்கும் ஒரு முன்னோடி இலக்கிய ஆக்கம் இருக்கும். இந்த தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளாமல் இருக்கையிலேயே ஒரு சினிமா காட்டுவது அந்த சினிமாவால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்ற பிரமைக்கு ஆளாகிறார்கள்.

உதாரணமாக சமீபத்தில் ஆப்ரிக்கச் சேரிகளைப்பற்றிய பல படங்கள் வெளிவந்தன. அவற்றைப்பற்றிய விவாதங்கள் நேர்ப்பேச்சிலும் இணையத்திலும் அடிபட்டன. இந்த அனைத்துப்படங்களின் சித்தரிப்பும் மிகயீல் கலட்டோசோவ் இயக்கிய [ Mikhail Kalatozov] ஐயம் கியூபா [ I am Cuba ] என்ற மாபெரும் செவ்வியல் படத்தின் சித்தரிப்புமுறைக்குக் கடமைப்பட்டவை என இப்போது பார்க்கும்போது தெரிகிறது. இணையம் முழுக்க யாராவது அந்தப்படத்தைப்பற்றி ஏதேனும் சொல்கிறார்களா என்று பார்த்தேன். நான்தான் ஒட்டுமொத்தமாக பழசாகிவிட்டேனா என்ற சோர்வுக்கு ஆளானேன்.

ஏன் இந்த தளத்தில் நம் சினிமா ஆய்வுகள் நிகழ்கின்றன? யோசிக்கும்போது அப்படித்தான் அது நிகழ முடியுமென தோன்றுகிறது. இலக்கியத்தை உள்வாங்கி வாசிக்கமுடியாத ஒருவர் சினிமாவை மட்டும் அப்படி பார்த்துவிட முடியுமா என்ன? பல நல்ல சினிமாக்கள் இலக்கியத்தின் மறு ஆக்கங்கள். வங்க இலக்கியமே தெரியாமல் சத்யஜித் ரே அல்லது ரித்விக் கத்தக்கை என்ன வகையில் புரிந்துகொள்ள முடியும்?

பெரும் திரைப்பட ஆக்கங்கள் அவை நின்றுபேசும் பண்பாட்டின் நுட்பமான உட்கூறுகளையும் அவைசார்ந்த வாழ்க்கைச்சிக்கல்களையும் பேசுபவை. அவை முன்வைக்கும் குறியீடுகளையும் தத்துவக்குறிப்புகளையும் கணக்கில்கொள்ளாமல் அவற்றை முழுமையாக ரசிக்கமுடியாது. அந்த கூறுகளை ஒருவர் வாசிப்பு மூலமே பெறமுடியும். எதுவுமே வாசிக்காமல் சினிமா பார்த்தால் கதைச்சுருக்கம் சொல்லி இணையத்தில் இருந்து எடுத்த அபிப்பிராயங்களை ஏற்றி வைத்துத்தான் எழுத முடியும்.

உலகசினிமா பார்க்கும்போது நம்மவர்களிடம் ஏற்படுகிற இரு மனக்கோளாறுகளை நான் கவனித்துக்கொண்டு வருகிறேன். ஒன்று, நான் உலகசினிமா பார்க்கிறேனே என்ற பெருமிதமும் அதன் விளைவான பரபரப்பும். ’இதுமாதிரில்லாம் இங்க உண்டா’ என்ற மனநிலையிலேயே எப்போதும் இருக்கிறார்கள். உண்மை, நம்முடைய சினிமா இன்னமும் முதிராததே. ஐரோப்பா பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இலக்கியத்திலும் தத்துவத்திலும் பெரும்பாய்ச்சல்களை நிகழ்த்திவிட்டது. அவர்களின் சினிமா என்பது அந்த எழுச்சியின் உச்சியில் அமர்ந்து பயணம் செய்கிறது. நமக்கு இலக்கியத்தில் சாதனைகள் உள்ளன. நம் சினிமா அவற்றை இன்னமும் தீண்டிப்பார்க்கவில்லை

காரணம், சினிமா என்பது இலக்கியம், சிற்பம், ஓவியம் போல ஒரு பதிவுக்கலை அல்ல என்பதே. அது ஒரு நிகழ்த்துகலை நடனம், நாடகம் போல. எதிர்காலத்துக்காக அதைப்படைக்க முடியாது. அது பதிவுசெய்யப்பட்டாலும்கூட சமகாலத்தில் உடனே ரசிக்கப்படவேண்டும். வணிகரீதியாகவும் அது ஒரு நிபந்தனை. ஆகவே எல்லா நிகழ்த்துகலைகளையும்போல சினிமா சமகாலத்து மக்கள்மனநிலையுடன் உரையாடியே தன்னை உருவாக்கிக் கொள்கிறது. அது தன்னிச்சையாக இயங்க முடியாது. அந்தப் படத்தின் உத்தேசிக்கப்பட்ட ரசிகர்களுக்கும் அதன் படைப்பாளிகளுக்கும் நடுவே உள்ள ஒரு சமரசப்புள்ளியில் அது நிகழ்கிறது.

தமிழ் மக்களில் மிகப்பெரும்பான்மையினருக்கு இலக்கியம் என்ற எளிய அறிமுகமே இல்லை. ஏன், உலக சினிமா பற்றி பேசும் பெரும்பாலான தமிழ் ரசிகர்களுக்கே இலக்கியவாசனை இல்லை. அப்படி இருக்க இலக்கியத்தில் இருந்து வேர்நீர் எடுத்து தமிழ்சினிமா தன்னை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பு அரிதே. இந்திய மொழி சினிமாக்களில் மிகக்குறைவாக இலக்கியம் நோக்கி வந்த சினிமா தமிழும் தெலுங்கும்தான் என்று படுகிறது.

சினிமா ஒரு தொழில் என்ற அளவில் அந்த நிதியாதாரத்தை அதற்கு உருவாக்கித்தருமளவு ரசிகர்கள் தமிழில் இருக்கவேண்டும். அடுர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் மலையாளத்தில் உருவாகி வந்தார்கள் என்றால் பரவலான இலக்கியரசனை அங்கே முதலில் உருவானது. பல லட்சம் வாசகர்கள். அவர்களில் கணிசமானவர்களை திரைப்படக்கூட்டமைப்புகள் திரை ரசனைக்குக் கொண்டுவர கேரளத்தில் கிட்டத்தட்ட பத்துலட்சம் நல்ல ரசிகர்கள் உருவானார்கள். அடூரின் படங்கள் கேரளம்முழுக்க இருபது அரங்குகளில் பத்துநாள் ஓடும். அந்தப் பணம் அவரது இயக்கத்துக்குப் போதுமானது. தமிழில் பத்துலட்சம் தரமான வாசகர்கள் உருவானால் ஏற்கனவே இலக்கிய ரசனையில் ஒரு புரட்சி நிகழ்ந்திருக்கும். அதன் அடுத்த கட்டமே சினிமா ரசனை. தமிழில் இலக்கியம் வாசிக்காத ஒருவருக்கு தமிழில் நல்ல சினிமா எங்கே என்று கேட்கும் தகுதி அல்லது உரிமை இல்லை. இலக்கியம் சினிமா எல்லாமே ஒரே பண்பாட்டுவெளியில் இருந்து பிறப்பவைதான்.

இரண்டாவதாக உள்ள மனக்கோளாறு, சினிமா அனுபவத்தையும் மேல்நாடுகளைச் சார்ந்தே உருவாக்கிக் கொள்வது. அதாவது மேலைநாட்டு சினிமாவை மேலைநாட்டு ரசிகன் எப்படி ரசிக்கிறானோ அப்படியே ரசிப்பது. படங்களை காப்பி அடிப்பது பற்றி பேசுகிறார்கள். ரசனையைக் காப்பி அடிப்பது அதைவிடக் கேவலமானது. இந்த காப்பி ரசனை இருக்கும் வரை என்றாவது நம்மிடமும் மகத்தான படங்கள் வரும் என்ற சாத்தியக்கூறும் அடைபட்டுப் போகிறது. அசலான ரசனையில் இருந்தே அசலான படைப்பூக்கம் உருவாக முடியும். அசலான ரசனை உருவாகவேண்டுமென்றால் ஒருவருக்கு இங்குள்ள பண்பாட்டிலும் இலக்கியத்திலும் கலைகளிலும் வேர் இருக்க வேண்டும். ஆக, இது ஒரு விஷவட்டம்.

எண்பதுகளில் நான் ’காசர்கோடு ஃபிலிம் சொசைட்டி’யின் தீவிர உறுப்பினர். ஒரு நல்ல படம் பார்க்கவேண்டுமென்றால் பள்ளிக்கட்டிடத்தை இலவசமாகப் பெற்று நடுநடுங்கும் 16 எம் எம் திரையில் கறுப்பு வெள்ளையில் கொசுக்கடி நடுவே ஐம்பதுபேர் அமர்ந்து பார்ப்போம். பர்க்மானும் ஃபெலினியும் அவ்வாறு அறிமுகமானார்கள். அன்று கூட அமர்ந்து பார்த்தவர்களில் இருவர் இன்று கேரளத்தின் முக்கியமான இயக்குநர்கள்.

சென்ற, பத்துவருடங்களில் நுண்வட்டுத் தொழில்நுட்பம் மூலம் தரமான படங்களை வீட்டிலேயே உயர்தரக் காட்சியாக தினமும் பார்க்கும் வசதி நமக்குக் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட நம்முடைய வரவேற்பறைகளில் ஒரு பெரிய நதி வந்து கொட்டிச்செல்வதுபோல. ஆனால் அதிலிருந்து எதையும் அள்ள நம்மால் முடிவதில்லை -அதற்கான பாத்திரங்கள் நம்மிடையே இல்லை. இந்தப் படங்கள் நமக்கு அளிக்கும் வாழ்க்கை, பண்பாட்டு,தத்துவ, கலைச்சிக்கல்களை நாம் நம்முடைய வாழ்க்கையின், நம்முடைய பண்பாட்டின், நம்முடைய தத்துவத்தின், நம்முடைய கலைப்பாரம்பரியத்தின் பின்புலத்தில் நின்றுகொண்டு எதிர்கொள்ளும்போதே நம்முடைய சினிமா என்றாவது உருவாகும்.

ஆனால் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும் எதிர்வினைகளைப் பொதுவாகப் பார்க்கையில் நாம் இப்போதும் ஊட்டிவிடப்படும் சவலைப்பிள்ளைகள் என்ற எண்ணமே எழுகிறது. எப்படி தொழில்நுட்பத்தை வியப்பால் விரிந்த வாய்களுடன் வாங்கிக்கொள்கிறோமோ அப்படியே கலையையும் இலக்கியத்தையும் தத்துவத்தையும் வாங்கிக் கொள்ளும் எளிய நுகர்வோர் நாம்.

http://www.jeyamohan.in/?p=6018 அவதார் – ஒரு வாக்குமூலம்
http://www.jeyamohan.in/?p=4731
வ.கௌதமனும் ‘தலைமுறைக’ளும்

http://www.jeyamohan.in/?p=3227
சினிமா, கடிதங்கள்

http://www.jeyamohan.in/?p=3095 சமரச சினிமா

http://www.jeyamohan.in/?p=237 தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

http://www.jeyamohan.in/?p=521 சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

மலையாள சினிமா ஒரு பட்டியல் http://www.jeyamohan.in/?p=534

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://do.jeyamohan.in/7563/

8 comments

1 ping

Skip to comment form

 1. Elango Kallanai

  அன்புள்ள ஜெ சார்,
  சினிமா என்பதை ரசிக்க பெரிய பயிற்சி தேவைப்படுகிறது. என்னுடைய வேலையில் தொழில் ரீதியாக சினிமா விமர்சனம் செய்வது எப்படி என்று ஒரு எலக்ட்ரானிக் புத்தகம் எழுதினோம். நாடகம் மற்றும் சினிமாவுக்கான கோட்பாடுகள் மிகவும் உச்சநிலையில் வைத்து விவாதிக்கப்படுகின்றன. ஒரு விமர்சகர் என்பவர் சுமார் ரெண்டாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்படங்களை, பார்கிறார், வெவ்வேறு பார்வைகளுடன் பார்க்க சொல்லித் தரப்படுகிறது. பல நல்ல விமர்சகர்கள் நல்ல இயக்குனர்களும் கூட. நம் தமிழ் சினிமாவில் இயக்குனர் என்பவர் காசு வாங்காமல் வேலை செய்யும் அப்ப்ரசெண்டிகளாய் இருந்து அப்புறம் இயக்குனர்களாய் மாறுகிறார்கள். இலக்கியம் மற்றும் கதை என்பதெல்லாம் இங்கே விபத்தாய் நல்லபடியாய் அமைவது தான் அடிக்கடி நடக்கிறது. பல சினிமா மற்றும் இசை விமர்சகர்கள் நிறைய அயல் நாட்டுப் பெயர்களை தூவியாபடி ஏதோ முக்கியமான விஷயத்தை கண்டுபிடுத்துவிட்டது போல் பேசுகிறார்கள். சினிமாவை நல்ல சினிமா கெட்ட சினிமா என்றெல்லாம் பார்க்காமல் நிறைய பார்கிறவர்கள் சினிமா பற்றி பேச வேண்டும். எழுதும்பொழுது தொழில் ரீதியாக தெரிந்திருக்க வேண்டும். சினிமா ஆர்வம் மட்டுமே போதுமானதாக இருக்காது. சினிமா விமர்சனம் வியாபாரத்தை பாதிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் எப்படி விமர்சிக்க முடியும். இலக்கிய விமர்சனம் கூட அப்படித்தான் இருக்கிறது.
  இளங்கோ. க

 2. sureshkannan

  அன்பான ஜெயமோகன்,

  You made my day. நீங்கள் வாசிக்கும் திரைவிமர்சனப் பதிவுகளில் குறிப்பானதாக என்னுடைய வலைப்பதிவையும் சுட்டிக் காட்டியிருப்பதற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சியோடு சங்கடமாகவும் இருக்கிறது. அதற்கான தகுதியுண்டோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதை நோக்கி பயணிக்கும் முயற்சியையாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலை உங்களின் சுட்டிக் காட்டல் நிகழ்த்தியிருக்கிறது. இணையத்தில் (தமிழில்) உலக சினிமா குறித்தான பதிவுகள் எழுதபபடும் விதம் குறித்து நீங்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் பெரும்பாலும் எனக்கும் பொருந்துபவையே எனும் குற்றவுணர்வோடு இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன். மீண்டும் நன்றி.

 3. kazhudhai

  ஜெ

  இந்தத் தளங்களை நீங்கள் படித்ததுண்டா தெரியவில்லை; நான் படிக்கும், ரசிக்கும் சிலத் தளங்கள்:

  http://baradwajrangan.wordpress.com/2009/02/12/conversation-with-the-creator-of-naan-kadavul/

  http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/

 4. bala

  உடல் உறுப்பு தானம் சென்டிமென்ட் படித்தவுடன் எனக்கும் ஒரு யோசனை வந்தது.. சொன்னால் எல்லோரும் செருப்பால் அடிப்பார்கள் என்பதால் விட்டுவிட்டேன்.. மும்பையில் இப்போது தனியாக இருக்கும் போது நேரம் கொல்ல நான் சினிமாக்கள் பார்த்துத் தள்ளுகிறேன்.. கொஞ்ச நாள் முன்பு படம் பார்த்தவுடன் வரும் எண்ணங்களை கட்டுரையாக எழுத முயன்றேன்.. ஆனால் ஒரு காட்சியைப் படமாக எடுக்கும் சிரமம் கண்டு, அவ்வுழைப்பை விமரிசனம் செய்வது வருத்தமாக இருந்தது. விட்டுவிட்டேன். (பிழைத்தது தமிழ் சினிமா). அன்பே வா.. முதல் பூ வரை பாரபட்சமில்லாமல் பார்த்து தள்ளுகிறேன்.. எல்லாம் இன்ப மயம்!!

 5. Ramachandra Sarma

  திரைப்படத்திற்கான இசையில் செவ்வியல் கூறுகள் இருக்கின்றன என்ற பட்சத்தில், திரைப்படத்தின் கதைகளும் இலக்கியத்தில் வேர்கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணம் என்னவோ சரிதான். ஆனால் அது தொழில் என்ற அளவில், அதிலிருப்பவர்கள் கலைஞர்கள் அல்லவே, தொழில்நுட்பத் தொழிலாளர்கள் மட்டுமே. இசை கூட நாடத்தின் தேவையால் வந்த ஒரு வெளிப்புறப் பங்களிப்பு மாத்திரமே. சினிமாக்காரர்கள் பாடல்களையும் படத்திற்கு தேவையில்லை என்று கூறி நிறைய காலமாகிவிட்டது. எனவே இதில் வருத்தப்படவேண்டியதே இல்லை. ஏனெனில், சினிமா ஒரு வியாபாரம் மட்டுமே. அதிலிருப்பவர்கள் கலைஞர்கள் அல்ல, வெறும் வியாபாரிகளும் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் மட்டுமே. கலைஞர்கள் சினிமாவிற்கு வருவது என்பது பொருளாதாரத்திற்காகவும், புகழுக்காகவும் அவனது உண்மையான சுயத்தோடு செய்துகொள்ளும் ஒரு சமரசம் மட்டுமே. அதற்கான நியாயங்களை கற்பித்துக்கொள்ளவேண்டிய நிலையில் கலைஞனை வைத்திருப்பதற்காக சமூகத்தை வேண்டுமானால் மனதார சபிக்கலாம். ஒரு திருப்திக்காக.

 6. vennir

  திரு ஜெயமோகன் அவர்களுக்கு

  //தமிழில் பத்துலட்சம் தரமான வாசகர்கள் உருவானால் ஏற்கனவே இலக்கிய ரசனையில் ஒரு புரட்சி நிகழ்ந்திருக்கும். அதன் அடுத்த கட்டமே சினிமா ரசனை. தமிழில் இலக்கியம் வாசிக்காத ஒருவருக்கு தமிழில் நல்ல சினிமா எங்கே என்று கேட்கும் தகுதி அல்லது உரிமை இல்லை. இலக்கியம் சினிமா எல்லாமே ஒரே பண்பாட்டுவெளியில் இருந்து பிறப்பவைதான்.//

  எனக்கு ஒரு சந்தேகம் – இலக்கிய தரமான சினிமா வழியாக இலக்கிய வாசகர்களை உருவாக்க முடியாதா?. மக்களை, சினிமா பார்த்ததினால் இலக்கிய வாசிப்புக்கு நகர்த்த கூடிய சூழ்நிலையை தரமான சினிமாவினால் உருவாக்க முடியாதா?

 7. nijas83

  நல்ல சினிமா ஏதிற்பற்பவான் இலக்ய போதம் மட்டும் வேண்டாம் சமுதாயம் நல்லா இருக்கணும் யன்று போதம் வேண்ட்ரும்

 8. Jeyapandian

  தமிழ் சினிமாவை விமர்சனம் செய்ய தமிழ் இலக்கியம் படிப்பது மட்டுமே தகுதி என்றால், தமிழ் இலக்கியம் தெரியாதவர்கள் என்ன இலவசமாக சினிமா பார்கிறர்களா?
  காசு கொடுத்து டிக்கெட் வாங்குபவன் நல்ல சினிமா கேட்டு விமர்சனம் செய்ய கூடாது என்பது என்ன சமூகம்?

 1. Tweets that mention jeyamohan.in » Blog Archive » நமது சினிமா ரசனை -- Topsy.com

  […] This post was mentioned on Twitter by Kaarthik, ஒரு பக்கம். ஒரு பக்கம் said: ஜெமோக்கு @sureshkannan70 சினிமா விமர்சனங்கள் ரொம்ப புடிக்குமாம் http://bit.ly/bMfhKO. பிச்சைபாத்திரத்துக்கு வந்ததோர் சோதனை :) […]

Comments have been disabled.