«

»


Print this Post

ஷாஜியின் விளக்கம்


மும்பையிலிருந்து ஷாஜி கூப்பிட்டார். என்னுடைய கட்டுரையில் சிலவிஷயங்களுக்கு வலுவான கண்டனத்தையும் சில விஷயங்களுக்கு மறுப்பையும் சிலவிஷயங்களுக்கு விளக்கத்தையும் தெரிவித்தார். எழுத நேரமில்லை என்பதனால் நானே அவற்றை எழுதிப் பதிவுசெய்யவேண்டுமென்று சொன்னார். ஆகவே இப்பதிவு.

1. கல்யாணியின் தந்தையின் நண்பர் என்ற முறையிலும், அவரது பாடல்களைக் கேட்டிருப்பவர் என்ற முறையிலும், புதியகுரல்கள் தேவை என லோகிததாஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க கல்யாணியின் பெயரையும் மேலும் ஒரு கேரளப் பாடகியின் பெயரையும் தான் அடையாளம் காட்டியதாகவும் யாருக்காகவும் சிபாரிசு செய்வதில்லை என்று கொள்கை கொண்டிருப்பதாகவும் ஷாஜி சொன்னார்.

2. சலீல் சௌதுரிக்காக ஷாஜி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நான் குறிப்பிட்டதுபோல சிறிய நிகழ்ச்சி அல்ல என்று ஷாஜி சொல்கிறார். அது பெரிய நிகழ்ச்சி. ஆனால் இளையராஜாவுக்காக ஆறுமணிக்கே கூட்டத்தை ஆரம்பித்தமையால் கூட்டம் குறைவாக இருந்தது. அதைசு சுட்டிக்காட்டி ராஜா பேசினார். அன்று சலீல் சௌதிரி பற்றி ராஜா பேசியது நிறைவாகவும் உருக்கமானதாகவும் இருந்தது என்றும் சொன்னார்.

3. இளையராஜாமீது தனக்கு எவ்வகையிலான வருத்தமும் கோபமும் இல்லை என்றும்,  எக்காலமும் இளையராஜாவின் சிறந்தபாடல்களின் ரசிகன் என்றே உணர்வதாகவும் சொன்ன ஷாஜி தொண்ணூறுகளுக்குப் பின்னர் ராஜா மிகக்குறைவாகவே நல்ல பாடல்களை அமைத்திருக்கிறார், அதற்கு அவர் இமேஜ் வலையில் விழுந்து தன் எல்லைகளை தானே குறுக்கிக் கொண்டது தான் காரணம் என்றும் மட்டுமே தான் சொல்லியிருப்பதாகவும் சொன்னார். ராஜாவின் தனிப்பட்ட விஷயங்களுக்குள் சென்றது இந்த சிக்கலை விளக்குவதற்காக மட்டுமே என்றார்

4. தன்னுடைய கட்டுரையில் இளையராஜாவை சமகாலத்தைச் சேர்ந்த எந்த இந்திய இசையமைப்பாளருடனும் ஒப்பிடவில்லை, உலக இசைமேதைகளுடன் மட்டுமே ஒப்பிட்டு; அவர்களுக்கு நிகரானவரான இளையராஜா ஏன் அந்த சாதனைகளை நிகழ்த்தமுடியாமல் போயிற்று, அதற்கான சமூக உளவியல் காரணங்கள் என்ன என்பதைப்பற்றியே பேசியிருப்பதாக ஷாஜி குறிப்பிட்டார்.

5. கர்நாடகசங்கீதம் அல்லது மேலைசங்கீதத்தை முறையாகக் கற்றவர்களே அதன் இலக்கணங்களைப்பற்றி பேசமுடியும், தான் கற்கவில்லை என்று சொன்ன ஷாஜி ஆனால் இசையை ரசிக்கவோ மதிப்பிடவோ அந்த இலக்கண அறிவு தேவையில்லை என்று உணர்வதாகவும், சிலசமயம் தடையாகவேகூட அமையும் என்று நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.

6. இளையராஜாவின் பாடல்கள் திருட்டு அல்லது நகல் என்று குற்றம்சாட்டுமளவுக்கு தான் இசையறியாதவனல்ல என்று மறுத்த ஷாஜி பல்லாயிரம் பாடல்கள் செய்த ராஜாவின் இசையில் பலநூறு மகத்தான பாடல்களை அமைத்த அவரது சாதனையில், சில பாடல்களில் சாயல்கள் அல்லது செல்வாக்குகள் அல்லது கடன்பெறுதல்கள் இருப்பதை குறையாகக் காணவில்லை என்றும் அப்படி இல்லாத மேதைகளே இல்லை என்றும் சொன்னார். இசையில் பிறரது செல்வாக்கு என்பது மேதைகளால்கூட தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்க, சாதாரணமாக சிலரது இசையில் தன்பாதிப்பு இருப்பதை கடுமையாக கண்டிக்கும் இளையராஜாவின் மனநிலையின் சமநிலையின்மையைச் சுட்டுவதற்கே தான்  அக்கட்டுரையில் முயன்றிருப்பதாக ஷாஜி சொல்கிறார்.

7. சலீல் சௌதுரியின் பாடல்களில் நாட்டுப்புற மெட்டுகள் பல்வேறு சர்வதேச மெட்டுக்களின் சாயல் உண்டு. அவற்றை அவரே தன் மூலமென்ன என்று குறிப்பிட்டுதான் இசையமைத்திருக்கிறார் என்றார் ஷாஜி. சலீல் சௌதிரி இந்திய திரையிசையில் கலப்பிசை [·ப்யூஷன்] யின் முன்னோடி. அந்த இடத்தை அவருக்களித்தவை அந்த மூலங்களே என்றார்.

8. சலீல் சௌதிரியையும் விமரிசனத்துடன் மட்டுமே அணுகியிருப்பதாகச் சொல்லும் ஷாஜி முகேஷ் போன்ற சாதாரண பாடகர்களை சலீல் ஊக்குவித்ததை விமரிசித்திருப்பதாகச் சொல்கிறார். சலீல் சௌதுரியின் மீதான ஈடுபாடு என்பது வெறும் இளமைக்காலத்து மனப்பழக்கம் அல்ல; அவரது இசையை இன்று, விரிவான இசையறிவுடன் , அணுகும்போதுகூட அவரது ஆளுமை வளர்ந்துகொண்டே செல்கிறது என்றார்

9. என்னுடைய கட்டுரையில் தனிப்பட்ட காரணங்களால் இசையை அவர் அணுகுவதாக சொல்லியிருப்பதைக் கண்டித்த ஷாஜி அப்படி ஒரு தனிப்பட்ட உணர்வுகள் ஏதும் இதில் இல்லை சொன்னார். அதில் சொல்லப்பட்ட தகவல்களை கூடுமானவரை நம்பகமான மூலங்களில் இருந்தே பெற்றுக்கொண்டதாகவும் சொன்னார்.

10. கலைஞனின் சமூகப்பொறுப்பு, தன்னுடைய கலைவடிவத்தை தன் அகங்காரத்தைவிட மேலாக நினைக்கும் நோக்கு ஆகியவை எந்த கலைஞனுக்கும் தேவை என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும், ஆகவே தன்னுடைய கட்டுரையை இப்போதும் சார்ந்து நிற்பதாகவும் ஷாஜி சொன்னார்.

என்னுடைய விளக்கங்களை நான் குறிப்பிட்டேன்.

1. ஷாஜியின் கட்டுரைகள் தமிழில் வெளிவர வேண்டுமென நான் விரும்பி முயன்றமைக்குக் காரணம் தமிழில் திரையிசை விமரிசனம் என்பது எந்தவகையான தொழில்நுட்ப, இசையறிதலும் இல்லாமல் வெறும் கிசுகிசு பாணியிலேயே செய்யப்பட்டு வந்ததை உணர்ந்த கசப்பினால்தான். சினிமாக்கிசுகிசுக்களில் வளர்ந்தது சராசரித் தமிழ்மனம்.

ஷாஜியின் முந்தைய கட்டுரைகள் கறாரான இசைவிமரிசன சட்டகத்திற்குள் நிற்கக்கூடியவை. இசை என்ற அகவயமான அனுபவத்தை முடிந்தவரை புறவயமாக பேசக்கூடியவை. உதாரணமாக பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களைப்பற்றிய அவரது விமரிசனத்தைச் சொல்லலாம்.

சுசீலாவின் மணிக்குரல் அழகாக இருக்கும்போதே பலவகையிலும் உணர்ச்சித்தொடர்புறுத்தலை விட்டுவிடுகிறது என்று ஷாஜி சொல்லி அதற்கான காரணங்களையும் உதாரணங்களையும் சொன்னார். கோவிந்தராஜன் தேவையற்ற பிர்காக்களுடன், சுருதி மீறி ஒலிக்கும் ஆலாபனையுடன், அவரோகணங்களில் ஏராளமான பிழைகளுடன்தான் பாடியிருக்கிறார் என்றும் எல்லா பாட்டுக்கும் ஒரே பாவம் கொடுக்கிறார் என்றும் சொல்லி விளக்கியிருக்கிறார்

இவை இசை சார்ந்த விமரிசனங்கள். இசையின் எல்லைக்குள் நிற்பவை. இவற்றை மறுக்கலாம் ஆனால்  அந்த விவாதம் இசை விவாதமாகவே இருக்கும். ஆனால் இந்தக் கட்டுரை முதல் முறையாக ஷாஜியின் வழக்கமான கறாரான இசை நோக்குக்கு வெளியே செல்கிறது. இசைக்கு அப்பாலுள்ள விஷயங்களை பயன்படுத்துகிறது. கிசுகிசுக்களை நம்பி செயல்படுகிறது

இதுதான் ஷாஜியின் வழிமுறை என்றால் அவரது வருகையே  அர்த்தமில்லாததாக ஆகிவிடும். அவர் இங்கே வம்பளக்கும் கும்பலில் ஒருவராக தானும் ஆகிவிடுவார். இதை மட்டுமே நான் சுட்டிக்காட்ட விரும்புவதாக சொன்னேன். எதிர்காலத்தில் ஷாஜி எழுதும் கட்டுரைகள் முந்தைய தரமான கட்டுரைகளின் வழியையே தொடரவேண்டும் என்பதே என் விருப்பம் என்றேன்.

‘எனக்கு எவ்ளவு வெல்விஷர்ஸ் தெரியுமா…·போன்கால்களா வருது’ என்று சொல்லிச் சிரித்தார். எனக்கும்தான் என்றேன்.

ஜெயமோகன்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://do.jeyamohan.in/6497/

19 comments

Skip to comment form

 1. Ramachandra Sarma

  ஷாஜி அவர்களுடன் சில காலமாக தொடர்பில் இருந்தாலும் அவரின் நேர்மை சந்தேகத்திற்குரியதல்ல என்று உணர்ந்துதான் இருக்கிறேன். இருந்தாலும் என்னை போன்ற சாதாரண ரசிகனைப்போல எடுத்தேன் கழ்விழ்தேன் என்று எழுதும் உரிமை அவரைப்போன்றவர்களுக்கு இல்லை என்பதை சொல்லவே விழைந்தேன். அந்தக்கட்டுரையின் த்வனி தேவையில்லாத விமரிசனங்களை வரவழைத்தது. அதை அவரே வரவசித்துக்கொண்டர் என்றும் சொல்வேன். லலிதாராமுடன் முன்தினம் உரையாடிய போதும் ஷாஜி தரப்பில் அவரை நியாயப்படுத்திதான் பேசிக்கொண்டிருந்தேன். கோவிந்தராஜன் குறித்த அவரது கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன். ஷாஜி அந்தக் கட்டுரையை எழுதவில்லை என்று நினைத்துக்கொள்கிறேன்.

 2. Ramachandra Sarma

  அப்படியே எழுதியிருக்கிறார் என்றாலும் சகவாசதோஷம் ;) என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

 3. kuppan_yahoo

  என்னை போன்ற பாமரனுக்கு இளையராசா பாடல்களை மட்டும் கொடுக்க வில்லை, மனித நேயம், சக மனிதர்களை மதித்தல் போன்ற பண்புகளையும் சேர்த்து கொடுத்து உள்ளார்

  எனவே ஷாஜியை வெறுக்காமல் அன்பு காட்டி அரவணைப்போம்.

  இளையராஜாவின் திறமைக்கு இந்த ஒரு காட்சி போதும். ஒரு சக பாடலாசிரியனை எந்த அளவு மதித்து சிறப்பிக்கிறார் என்பதற்கு.

  .http://www.youtube.com/watch?v=QKu1SbSxrZU

 4. sureshkannan

  உலக இலக்கிய வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என நினைக்கிறேன். விமர்சித்தவரே அவரால் விமர்சிக்கப்பட்டவரின் மறுப்பைக் கேட்டு எழுதி பிரசுரம் செய்தது. :-)

 5. usha sankar

  Dear JM,
  Shaji innum 2 thavarana thagavaluku vilakam sollavillai.
  Video vil irundhum (ipodhu Youtube il irukriadhu.), epadi
  thavara sollalam….
  Kattayam solla vendum.
  Porupu enbadhu muzhumaiyaga iruka vendum.
  With Love,
  Usha Sankar.

 6. Sanjeevi

  அகங்காரம் என்ற வார்த்தை வேண்டாம், திமிர் என்று எடுத்துக்கொள்வோம். ஒரு மிகப்பெரிய அசல் (original) கலைஞனுக்கு திமிர் என்பது ஒரு அழகு. கண்டிப்பாக இருக்க வேண்டும். அது போல inspiration இல்லாதவன் மிகச்சிறந்த கலைஞன் ஆகா முடியாது. பல காலமாக நான் இளையராஜாவின் திமிருக்கு ரசிகன் நான் :) .

 7. Sanjeevi

  அப்புறம், சமூக பொறுப்பு? ஒரு MLA விடம் செய்ய தவறியதை (அவர் அதற்காகவே அந்த பொறுப்பிற்கு வந்திருக்கிறார்) தட்டியோ அல்லது சுட்டியோ காட்ட துப்பில்லாதவர்கள் ராஜா போன்றவர்களிடம் வருகிறார்கள். இவர்கள் ஒன்றை சுலபமாக மறந்து விடுகிறார்கள். ராஜா நல்ல இசையை கொடுத்திருக்கிறார் மக்களுக்கு, அதை விட என்ன பெரிய சமூக தொண்டு வேண்டி கிடக்குறது. செய்தால் அது Bonus இல்லை என்றால் என்ன கெட்டது இங்கே?

 8. appavi

  சரி அவரின் மத நம்பிக்கையை புண்படும் விதத்தில் பேசியது ஏன்?அவர் சமூகத்துக்கு செய்தது என்ன என்பது போன்ற சம்பந்தமில்லாத கேள்விகளை எழுப்பியது ஏன்?ஒன்றுமில்லை அவருக்கு தேவையான விளம்பரம் கிடைத்து விட்டது.அதனால் இப்போது சிறிது இறங்கி வந்திருக்கிறார்.
  இங்கு முன்பு ஒருவர் பின்னூட்டத்தில் கூறியது போல் அவரின் சகவாசமே இந்தகைய கட்டுரைக்கு காரணம்.மேலும் பத்திரிக்கை விற்க சிலர் இவரை தூண்டியதும் அவர்களின் வேட்கைக்கு இவர் பலியாகி விட்டார் என்பதே உண்மை.

 9. chandanaar

  அன்புள்ள ஜெ..
  ஷாஜியின் விளக்கத்தை பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி..

  ஷாஜிக்கு ராஜா மீது அதீத கோபம் இல்லாவிடில் ‘எப்பவும் நான் ராஜா போன்ற மதிமயக்கங்களால் சிறந்த இசையை உருவாக்கி விட முடியாது. ‘ என்று இவ்வளவு காலம் பல சாதனைகளை செய்த ஒருகலைஞனை சின்ன பையனை கண்டிப்பது போல் நிதானம் தவறி விமர்சித்தது , ‘பழசிராஜாவின் இசை தோல்வியடைய ONV தான் காரணம் என்று ராஜாவே சொன்னதாக சரியான ஆதாரம் இல்லாமல் சொன்னது..
  ராஜா ஒரு தினக்கூலியாக இருந்தார் என்று இந்த கட்டுரைக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாமல் உளறிகொட்டியது..
  பாப் மார்லி போன்றவர்களை இழிவு படுத்தியதாக ராஜா மீது சில ‘உலக அறிவு ஜீவிகள்’ வைக்கும் ஆதாரம் அற்ற குற்ற சாட்டுக்களை , எவ்வித தயக்கமும் இல்லாமல் தானும் வழிமொழிந்தது , ராஜாவுக்கு உலக அங்கீகாரம் கிடைக்காததற்கு அவரது தனிப்பட்ட முசுடு குணமே காரணம் என்பது போல் புண்படுத்தி எழுதியது.. எல்லாவற்றுக்கும் மேலாக கஸ்தூரிமான் பட பாடகி தேர்வு விஷயம். என் எண்ணம் என்னவென்றால் ஒவ்வொரு துறையிலும் தொழில் சார்ந்து பல விஷயங்கள் நடக்கும். சில சமயம்தொழில் இடங்களில் சண்டை நடக்கலாம். பாட வந்தவர்களை அல்லது இசை கலைஞர்களை கோபித்துக்கொள்ளவோ நிராகரிக்கவோ ஒரு கலைஞனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. எல்லோரும் மனிதர்கள் தானே. தவிர அவ்வப்போது கோபம் பின்பு நிதானம் என்று மாறுவது ஒரு மனிதனின் இயல்பு தானே. அதிலும் ஒரு கலைஞன் எவ்வளவு உணர்சிகரமானவன் என்பது இவர்க்கு தெரியாதா என்ன? இன்னும் சில அத்துமீறல்களை எவ்வித தயக்கமும் இல்லாமல் சொன்னதும் அல்லாமல் அதற்காக குறைந்த பட்சம் வருத்தம் கூட தெரிவிக்காமல் தான் சொன்னது சரிதான் என்று சொல்லும் அளவுக்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது. இத்தனை கோடி பேர் உருகி ரசிக்கும் இசைக்கு சொந்தக்காரான ஒரு மாபெரும் கலைஞனை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
  இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்காமல் தான் சொன்னது சரிதான் என்று இன்னமும் சொல்லிவந்தால் அவருக்கு இசை மீதும் இசைவிமர்சனம் மீதும் இருக்கும் ஈடுபாடு கண்டிப்பாக சந்தேகத்துக்குரியது.

 10. Arangasamy.K.V

  மன்னிக்கவும் ,சில பின்னூடங்கள் அனுமதிக்கப்படவில்லை

 11. chandanaar

  இவ்வளவு பெரிய ஆளுமையை விமர்சனம் செய்ய துணியும் ஷாஜி..இதனை பேர் கேட்கும் சாதாரண கேள்விகளை தாங்க முடியாதவராய் இருக்கிறார். கலைஞன் மட்டும் தான் விமர்சனத்துக்கு உரியவனா? விமர்சகன் எல்லையை கடந்தவனா என்ன?
  தன சுய விருப்பு வெறுப்புகளை விமர்சனம் என்ற பேரில் வெளியிடும் மனிதர்கள் எப்படி நல்ல விமர்சனம் தர முடியும்?

 12. dineshan21

  100 % Agree with Chandanar ji comments.He must apologize.The real face of Raja sir is very well explained by Agilan article about IR.- in vallinum.

 13. dineshan21

  And the way he written and the wrods he used only shows only his own face& what kind of person he is.Nothing else..Get well soon..Shaji.

 14. usha sankar

  Dear JM,
  Ungalin indha idathai – Shaji yai vimarsika payan paduthuvadharku
  ennudaiya mannipai koori kolgiren…

  shaji – Avarudaiya padhivil – idharku idam tharavillai.
  Idhiliyae avarudaiya kurigiya manam patri therigiradhu.
  Thannudaiya karuthil thavaru illadhadhu polavum, Neengalaum, Naangalum,
  Indha IR um, PS um. Seerkazhi yum than thavaru seibavargal pola
  ninaikum ivarai patri enna solvadhu..

  Science ai padithu vittu (vasathiyaga), Scientist ai pazhipadhu pola ( Enna oru paava seyal)

  Adhai pola – Isaiyai padithadhalyae – Isai Amaipalarglaiyum, Paadubavargalaiyum pazhikum ivar – thannai patri konjam sindhika vendum…….

 15. jay

  உங்களுடைய பரிந்துரையின் பேரில் ஜார்ஜின் எம் எஸ் படித்து முடித்த பரவசம் இன்னும் தீரவில்லை. எம் எஸ் ஐ நினைத்தல்ல பால சரஸ்வதியை நினைத்து விம்முகிறது இதயம், இப்படி ஒன்றை படித்து விட்டு இங்கே பார்த்தால் கீழ்த்தர மனதின் சாட்சியாக சாஜியின் கட்டுரை. தீவிர வாசகன்/ரசிகனின் உள்ளம் இதன் உண்மை நிறத்தை அடையாளம் கண்டு கொள்வது ஒன்றும் கடினமல்லவே. உங்களுடைய கவித்துவமான மொழிபெயர்ப்பைக் களைந்து விட்டுப் பார்த்தால் தேறுபவை இசை விமர்சனங்கள் அல்ல செய்தி துணுக்குகள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. பெரு முயற்சி எடுத்து கட்டி எழுப்ப பட்ட சாஜியின் விமர்சக பிம்பத்தை அகிலனின் சமீபத்திய இசைக்கட்டுரை ஒன்று கவிழ்த்துப் போட்டு விட்டது. சாஜி சம நிலை குலைந்து எழுதுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க கூடும்.

 16. perumal

  எப்பொழுதுதமிழ்சினிமாஇளையராஜாவை பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டதோ அதாவது 1995 க்கு மேல் அப்பொழுதே தமிழ் சினிமாவும் மரணித்து விட்டது.
  சொல்லுங்கள் அதற்குப்பிறகு எத்தனை நல்ல இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்த்துளார்கள்? எத்தனை தரமான படங்கள் வந்துள்ளன? என்று. எப்பொழுது மீண்டும்
  இளையராஜாவை அவருக்குரிய மரியாதையோடு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வருகிறார்களோ மணி ரத்னம் உட்பட அப்பொழுதுதான் தமிழ் சினிமா உருப்படும். வாழ்க இளையராஜா! வளர்க அவரது புகழ்!

  பணிவன்புடன்
  இசைப்பிதா இளையராஜாவின்
  முரட்டு பக்தன்
  பெருமாள்
  கரூர்

 17. gomathi sankar

  இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது என்று தோன்றுகிறது (அவர் என்னதான் easygoing மலையாளியாக இருந்தாலும்) பின்னூட்டங்களும் சற்று அதிகமாக போய்விட்டது இல்லையேல் வெறும் மனக்கசப்பு மட்டுமே மிஞ்சும் எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு என்ற விவிலிய வசனம் போல்இது நீங்கள் நண்பர்களுடன் முரணும் காலம் போலும்

 18. ஜெயமோகன்

  உண்மை கோமதி சங்கர், இங்கே முடித்துக்கொள்வொம் என்று நானும் நினைக்கிறேன்
  ஜெ

 19. appavi

  மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் “கண்ணீரிலாமல்” என்று பல குழப்பமான சிக்கலான விஷயங்களை பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதினர்.அதில் அவர் கர்நாடக சங்கீதம் பற்றியும் எழுதினார்.அவர் முதல் பத்தியிலேயே அவர் குறிப்பிட்டது” எனக்கு சாஸ்த்ரிய சங்கீதம் தெரியாது.ஆனால் கேள்வி ஞானம் சிறிது உண்டு.ஆனால் யாராவது இசை மேதைகள் என்னிடம் கேள்வி கேட்டால் காத தூரம் ஓடி விடுவேன்.ஆனால் ராகங்கள் கண்டுபிடிக்க ஓரளவு தெரியும்”இவாறு அக்கட்டுரையின் முன்னுரை செல்கிறது.அதில் அவர் சொல்வது என்னவெனில் தனக்கு இசை பற்றி எந்த அளவு தெரியும் என முன்னமே விளக்கி விடுகிறார்.எனவே படிப்பவருக்கும் இதில் ஏதேனும் தவறிருப்பின் அந்த முன்னுரை ஒரு கழிதல் (Discount) ஆக செயல்படும்.ஆனால் இவர் எழுதுகையில் இவ்வாறு முன்னுரை ஏதும் அளிக்காமல் செயல் பட்டதே இவ்வளவு விவாதங்களுக்கு காரணம்.
  இந்தியாவில்தான் ஒரு கலையை பற்றி தெரியாமலேயே அதை விமர்சனம் செய்யும் போக்கு நிலவுகிறது.இதைபோல்தான் ஒரு பெண்மணி தொலைக்காட்சியில் ஒரு பட விமர்சனம் செய்யும் போது “இந்த படத்தில் நடிப்பவர்கள் எல்லோரும் Dark ஆக இருப்பதால் இது ஒரு Dark film என்றார்.

Comments have been disabled.