«

»


Print this Post

திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? 2


சி.என் அண்ணாத்துரை

 

அப்படியானால் திராவிட இயக்கத்தை ஓர் எதிர்மறைச் சக்தியாக, அழிவு சக்தியாக கருதுகிறேனா? இல்லை. அது ஒரு வரலாற்று நிகழ்வு அதன் காரணத்தையும் விளைவுகளையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். திராவிட இயக்கம் எனது பார்வையில் ஒரு ‘பரப்பிய’ இயக்கம் (Populist movement) பரப்பியம் என்ற சொல் ஒரு மார்க்சிய கலைச்சொல். அதற்குப் பொருள் ‘ஆழமான கொள்கையும், சமூகத்தைப் புரிந்து கொள்ளும் கோட்பாட்டு முறையும் இல்லாமல் சமூகத்தில் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு அரசியலதிகாரத்தை பிடிக்க முயலும் இயக்கம்’ என்பதாகும். திராவிட இயக்கத்தைப் போல அந்த வரையறை கச்சிதமாகப் பொருந்தும் இன்னொரு இயக்கம் இந்தியாவில் இல்லை.

திராவிட இயக்கம் பேசிய எந்த ஒரு கொள்கையையும் கோட்பாட்டையும் அது உருவாக்கவில்லை. அவற்றை தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் அது முன்வைக்கவும் இல்லை. அது அனைத்தையும் பிற சமூக, அரசியல் இயக்கங்களில் இருந்து எடுத்துக் கொண்டது. அவற்றை வெகுஜன கோஷங்களாக மாற்றி மக்கள் முன் வைத்தது. அதனூடாக அதிகாரத்தை நோக்கி நகர்ந்தது. அதிகாரம்தான் அதன் இலக்காக இருந்ததே ஒழிய அந்தக் கொள்கைகள் அல்ல. ஆகவே அதிகாரத்தின் பாதையில் தேவையான இடங்களில் அதை உதறி உதறி அது முன்னகர்ந்தது. எது அதன் சாரமாக நமக்குத் தோன்றியதோ அதையெல்லாம் அது அதிகாரத்திற்காக உதறியது.

திராவிட இயக்கத்தின் ஊற்றுக் கண்கள் பல. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல தமிழ்நாட்டில் சென்னையை மையமாக்கி 1890 களிலேயே உருவாகிவிட்ட தலித் விழிப்புணர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகளை அது எடுத்துக் கொண்டது. திராவிடம் என்ற கருதுகோள் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்களிடம் இருந்துதான் அதற்கு வந்து சேர்ந்தது. திராவிடக் கோட்பாட்டின் இன்னொரு மூல ஊற்று தென்தமிழகத்தில் நெல்லையை மையமாக்கி உருவான சைவ மறுமலர்ச்சி இயக்கம். அது வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதலியோரால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் இந்து மதத்திலும் சைவத்திற்குள்ளும் இருந்த பிராமண ஆதிகத்திற்கு எதிராக இந்த திராவிட வாதத்தை உருவாக்கினர்.

அயோத்திதாசரும் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையும் ஒருவருக் கொருவர் முற்றிலும் எதிரிகளாகவே இருக்க இயலும். ஆனால் திராவிட இயக்கத்தின் பரப்பிய அரசியல் இரு ஊற்றுக் கண்களையும் பயன்படுத்திக் கொண்டது. அவற்றுக்கிடையே சமரசத்தை உருவாக்கவில்லை. இரண்டையுமே ஏமாற்றியது என்று கூறலாம். ஆனால் திராவிட இயக்கத்தின் சார்புநிலை மனோன்மணியம் சுந்தரனார் பிரதிநிதித்துவம் செய்த சைவ- உயர்சாதி கருத்தியல் நோக்கியே இருந்தது. திராவிட இயக்கத்தின் முகப்பு அடையாளமாக சுந்தரம்பிள்ளை முன்னிறுத்தப்பட்டபோது அயோத்திதாசர் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டு மறக்கப்பட்டார். தலித் இயக்கம் 1980களில் உருவாகி வந்தபிறகுதான் அயோத்திதாசர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இல்லையேல்  வெறும் பெயராகவே எஞ்சியிருப்பார்.

திராவிட இயக்க அரசியலின் இன்னொரு ஊற்றுக்கண் ஜஸ்டிஸ் கட்சி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்து ஆட்சியதிகாரங்களைப் பெறவிரும்பிய உயர்குடியினரின் கட்சி அது. மன்னர்களும் ஜமீன்தார்களும் நிலப்பிரபுகளும் வழக்கறிஞர்களும் அடங்கியது. காங்கிரஸ¤க்கு எதிராக அதைப் பேணினார்கள் பிரிட்டிஷார். ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் என்பது பெரும்பாலும் ‘நியமன அரசியலே’ பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க விரும்பி மாகாண சபைகளையும் மத்திய சட்டமன்றத்தையும் உருவாக்கியபோது அது தேர்தல்களைப் புறக்கணித்த சந்தர்ப்பத்தில் தேர்தல்களில் ‘வென்று’ ஆட்சி அமைத்தது. ஜஸ்டிஸ் கட்சியின் பங்களிப்பாக இன்று கூறப்படும் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் இக்காலகட்டத்தில் உருவானவையே.

ஜஸ்டிஸ் கட்சி பேசிய இட ஒதுக்கீடுகள் எவையுமே மக்களுக்கான இட ஒதுக்கீடுகள் அல்ல. மக்களுக்கு அன்று அரசியலதிகாரமே இல்லை. வரி கொடுப்பவர்களுக்கு மட்டுமே அன்று வாக்குரிமை. அது பெரும்பாலும் உயர்சாதியினருக்கு மட்டுமே இருந்தது. ஜஸ்டிஸ் கட்சி கோரிய இட ஒதுக்கீடு என்பது அந்த எல்லைக்குள் நின்று கோரப்பட்டதே. ஆகவே தான் பிராமண எதிர்ப்பு அன்று அத்தனை முக்கியமாக தேவைப்பட்டது. காரணம் அன்றைய வாக்கு முறையில் பிராமணர்கள் நில உரிமை, வரி கொடுக்கும் உரிமை காரணமாக அதிகளவில் வாக்களித்தார்கள். அவர்களை எதிர்த்து வெல்ல பிற சாதியினருக்கு இட ஒதுக்கீடு தேவையாக இருந்தது.

காங்கிரஸ் இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுதந்து இந்தியக் குடியரசை அமைத்த பின்புதான் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற உண்மையான ஜனநாயகம் நடைமுறைக்கு வந்தது. அது எந்தவிதமான இடஒதுக்கீடும் இல்லாமலேயே பிற்படுத்தப்பட்டவர்களின் அதிகாரம் உருவாக வழிவகுத்தது. காரணம் பிற்படுத்தப்பட்டவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். நாம் இன்று காணும் பிற்படுத்தப்பட்டோர் அரசியல் இந்திய விடுதலைக்குப் பின்னரே உருவானது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த ஜனநாயக உரிமை என்பது வெறும் கண்துடைப்பு தான். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவி செய்யக்கூடிய, ஆலோசனை சொல்லக்கூடிய அதிகாரம் மட்டுமே அந்த அரசுகளுக்கு இருந்தது. அந்த அரசியல்மூலம் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. உயர்குடியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பதவிசுகம் அனுபவிக்க முடியும் அவ்வளவுதான். ஆகவே காந்தி எப்போதும் அந்த அரசதிகாரத்தை நிராகரிப்பவராகவே இருந்தார். ஒரு பயிற்சி என்ற வகைப்பாட்டில்தான் அதை அவர் கடைசியில் தற்காலிகமாக அங்கீகரித்தார்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகே இந்திய மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் கிடைத்தது. அந்த ஜனநாயகத்தின் விளைவே இன்று நாம் அனுபவிக்கும் எல்லா உரிமைகளும்; எல்லா வளர்ச்சிகளும். அந்தச் சுதந்திரத்திற்கு எதிராக பாடுபட்ட மரபுள்ளது ஜஸ்டிஸ் கட்சி. ஜஸ்டிஸ் கட்சியின் மறுவடிவமே திராவிட இயக்கம் .சுதந்திரத்திற்குப்பிறகு பிரிட்டிஷ் ஆட்சியிடம் சலுகை பெறுவதற்காக கேட்டுக் கொண்டிருந்த அதே இடஒதுக்கீடு கோரிக்கையை ஜனநாயக உரிமையாக மாற்றிக் கோரியது திராவிட இயக்கம். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதியும் அரசியலதிகாரத்திற்காக போராடிக் கொண்டிருந்த காலகட்டம் வந்தது. திராவிட இயக்கம் தமிழகத்தில் பிற்பட்ட சாதியினரின் அரசியல் குரலாக தன்னை மாற்றிக் கொண்டது . அதன்மூலம் அது அரசியலதிகாரம் நோக்கி நகர்ந்தது.

இவ்வாறு பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியலதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு ஒரு மூடுதிரையாகவே திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் கோஷங்களை எடுத்தாண்டது என்பதே வரலாறு. தமிழியக்கத்தின் கோஷங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்றிருந்தன. அவற்றுக்கு ஒரு இலட்சியவாதச் சார்பு இருந்தது. ஆனால் அதைவிட முக்கியமாக தமிழியக்கம் அதன்வலுவான ஒரு சாராரின் உணர்ச்சியாக பிராமண வெறுப்பை கொண்டிருந்தது. தமிழின் தனித்தன்மையையும், மரபையும் நிராகரித்த  பிற்போக்குத்தனமான பிராமண மதத்தலைவர்களும் அறிஞர்களில் சிலரும்தான் அந்த உணர்ச்சி உருவாவதற்குக் காரணமானவர்கள். அந்த பிராமண வெறுப்பு ஆட்சியதிகாரத்திற்காக பிற சாதியினரை ஒருங்கிணையச் செய்வதற்கு மிக முக்கியமான ஆயுதம் என்று திராவிட இயக்கம் கண்டு கொண்டது. அது பலன் தந்தது.

திராவிட இயக்கம் அரசியலதிகாரம் நோக்கி நகர்ந்த வரலாறு ஒரு முன்னுதாரண பரப்பிய இயக்கம் எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கான ஆதாரம். மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதே ஒரு மக்களியக்கம் செய்யும் பெரும் பணியாக இருக்கும். கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் இடதுசாரி இயக்கங்கள் செய்தது அதையே. அது சற்று கடினமான பாதை. ஆனால் மக்களின் அவ்வப்போதுள்ள ஐயங்களை, உணர்வெழுச்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதையே பரப்பிய இயக்கங்கள் செய்யும். அவை உடனடியான விளைவுகளையும் உருவாக்கும். ஆனால் ஓரு மக்களியக்கத்தின் உண்மையான வரலாற்றுப் பங்களிப்பு அவற்றுக்கு இருக்காது.

1940 முதல் இந்தியாவில் பஞ்சங்கள் ஆங்காங்கே உருவாகி 1943ல் உச்சம் கொண்டன. அவை சுதந்திர இந்தியாவை வேட்டையாடின. 1780 முதல் பிரிட்டிஷாரின் தவறான நிர்வாக முறை காரணமாகவும், சுரண்டல் காரணமாகவும், போர்கள் காரணமாகவும் இந்தியாவில் மாபெரும் பஞ்சங்கள் நிகழ்ந்து வந்தன என்பது வரலாறு. அப்பஞ்சங்களின் தூவானமே 1940 களின் பஞ்சங்கள். சுதந்திரம் கிடைத்த முதல் பத்து வருடங்கள் இப்பஞ்சங்களை சமாளிக்க காங்கிரஸ் ஆட்சி திணறியது. ஆனால் மாபெரும் பாசனத்திட்டங்கள் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்கி அடுத்த பதினைந்து வருடங்களில் இந்தியாவில் உணவுப் பஞ்சங்களே இல்லாத நிலையை உருவாக்கியது.

தமிழ்நாட்டிலேயே இன்றுள்ள மாபெரும் பாசனத் திட்டங்கள் பல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவானவையே. மொத்தக் கொங்குநாடும் நீர்ப்பாசன வசதி பெற்றது சி. சுப்ரமணியம் அவர்களின் முயற்சியினாலேயே. தமிழகத்தின் விவசாய நிலத்தின் பரப்பு 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் ஆரம்பகாலத்தின் பஞ்சங்களும் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட ரேஷன் முறையும் தமிழக மக்களில் கடுமையான அதிருப்தியை உருவாக்கியது. அவர்கள் சுதந்திரம் கிடைத்ததுமே நாட்டில் பாலும் தேனும் ஓடும் என்று நம்பிய எளிய மக்கள். அந்த அதிருப்தியை திராவிட இயக்கம் பயன்படுத்திக் கொண்டது.

அக்காலத்து பிரச்சாரங்களை இன்று வாசிக்கும்போது பிரமிப்பே உருவாகிறது. ‘தமிழகத்தில் தட்டினால் தங்கம் வெட்டினால் வெற்றி அத்தனையும் எடுத்து மக்களின் வாட்டத்தைப் போக்குவோம்’ என்று பேசினார் சி. என். அண்ணாதுரை அவர்கள். வட இந்தியா உணவுப் பஞ்சத்தில் அழிந்து கொண்டிருந்த காலம் அது. நேரு உலகநாடுகளிடம் உணவுபிச்சை கேட்டு அலைந்து கொண்டிருந்தார். அமெரிக்க நிதியுதவியால் பிகாரில் அவுன்ஸ் கணக்கில் மக்காச்சோளம் ரேஷனில் அளிக்கப்பட்டது. ஆனால் ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்று சி. என். அண்ணாதுரை அவர்கள் பிரச்சாரம் செய்தார். அந்த கோஷம் சாதாரண மக்களை விரைவிலேயே கவர்ந்தது

இந்தியா ஒரு அரசியல் தேசமாக ஒருங்கிணைக்கப் பட்டபோது மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கை உருவாகியது. பண்பாட்டு தனித்தன்மைகள் எங்கும் விவாதத்திற்கு வந்தன. அதுவரை திராவிட வாதம் பேசி வந்த திராவிட இயக்கம் எந்தவிதமான விவாதமும், விளக்கமும் இல்லாமல் மொழிவழி அரசியலுக்கு வந்து தமிழ் வாதம் பேச ஆரம்பித்தது. திராவிடமும் தமிழும் ஒன்றே என்று கூற ஆரம்பித்தார்கள். மொழிப் பிரச்சனையில் மக்களிடையே இருந்த ஐயங்களை பயன்படுத்திக் கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதலியவற்றின் மூலம் மக்களின் ஆதரவை பெற்றார்கள். இதன் பொருட்டே தமிழியக்கத்தின் தமிழ்முதன்மை வாதத்தை திராவிட இயக்கம் பயன்படுத்திக் கொண்டது.

மிகச்சிறந்த பரப்பிய இயக்கமாக விளங்கிய திராவிட இயக்கம் அன்று உருவாகிவந்த எல்லா வெகுஜன ஊடகங்களையும் திறம்பட பயன்படுத்திக்கொண்டது. ஒலிப்பெருக்கி மேடை, திரைப்படம், பரபரப்பு இதழியல் மூன்றுமே அதன் ஆயுதங்கள் ஆக மாறின. இத்தனைக்கும் அப்பால் இரு முக்கியமான கூறுகளைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். ஒன்று, சி.என்.அண்ணாத்துரை அவர்களின் ஈர்ப்புள்ள ஆளுமை. தன் லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும் நெருக்கமான தோழர்களையும் முழுக்க தன்னுடைய பெருந்தன்மையாலும், உண்மையான அன்பாலும், கடைசிவரை ஒரே அணியாகத் திரட்டி வைக்க அவரால் முடிந்தது. அவர்களின் அன்பையும் நம்பிக்கையும் முழுமையாகவே அவர் பெற்றார்

மறுபக்கம் தமிழகத்தின் மாபெரும் மக்கள்தலைவரான கு.காமராஜ் அவர்கள் தமிழகத்தை விட்டுவிட்டு டெல்லி அரசியலில் ஈடுபட்டது பெரும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது. அவருக்குப் பதில் இங்கே ஆட்சி செய்த பக்தவத்சலம் அவர்கள் ஓர் கறாரான நிர்வாகி. தமிழகத்தின் தொழில் விவசாய வளர்ச்சியில் அவரது திட்டங்கள் பெரும்பங்காற்றியுள்ளன. ஆனால் மக்களிடம் பேசும் வல்லமை இல்லாதவர் அவர். இந்த வாய்ப்பை திராவிட இயக்கம் சரியாகவே பயன்படுத்திக்கொண்டது.

அப்படியானால் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பு என்ன? அவற்றை சுருக்கமாக வரையறுத்து இவ்வாறு சொல்லலாம்.

1. திராவிட இயக்கம் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து அரசியல் அதிகாரத்தை அடைவதற்கு ஒரு ஊடகமாக செயல்பட்டது.பிற்படுத்தப்பட்டமக்கள் அரசியலதிகாரம் நோக்கிச் சென்றது என்பது இந்தியாவில் எங்கும் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. அந்த பயணத்திற்கு ஒவ்வொரு  மாநிலத்திலும் ஒவ்வொரு இயக்கம் பங்காற்றியிருக்கிறது. கேரளத்தில் இடதுசாரி இயக்கம். கர்நாடகத்தில் சோஷலிச இயக்கம். தமிழ்நாட்டில் அது திராவிட இயக்கத்தால் நடந்தது. அந்த அதிகார மாற்றம் என்பது இயல்பான இன்றியமையாத ஒரு ஜனநாயக நிகழ்வே.

2. ஒரு பரப்பிய இயக்கம் என்ற முறையில் திராவிட இயக்கம்  கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்தது. ஆகவே அது எடுத்துப்பேசிய சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களும் தமிழ் முதன்மைக் கருத்துக்களும் தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் அறிமுகமாயின. அறிவியக்கங்களின் கொள்கைகள் மக்களுக்கு சென்றுசேர மிகவும் தாமதமாகும். பரப்பிய இயக்கம் சில வருடங்களிலேயே அவற்றை நிகழ்த்தும். பெரும்பாலான தமிழக மக்களின் சிந்தனையில் சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பழைமைவாத எதிர்ப்பு போன்ற முற்போக்குக் கருத்துக்கள் திராவிட இயக்கம் மூலமே சென்று சேர்ந்தன.

தமிழகத்தின் சமூக மாற்றத்துக்கு இந்த கருத்துக்கள் மெல்லிய பங்களிப்பையே ஆற்றுகின்றன என்பதே உண்மை. ஏனென்றால் இக்கருத்துக்கள் பரப்பிய இயக்கத்தால் வெறும் கோஷங்களாகவே சென்று சேர்க்கப்படும். அப்போது எல்லாரும் மேடையில் சாதி ஒழிக என்பார்கள், நடைமுறையில் சாதி அப்படியே இருக்கும். சாரமுள்ள அறிவியக்கம் மட்டுமே கருத்துக்களை வரலாற்று புரிந்தலுடன் நடைமுறைத்தீர்வுகளுடன் முன்வைக்க முடியும். இருந்தாலும் இந்த அளவில் திராவிட இயக்கத்தின் பணி முக்கியமானதே.

3. ஒரு பரப்பிய இயக்கம் என்ற முறையில் திராவிட இயக்கம் பாமர மக்களுக்குரியதாக இருந்தது. ஆகவே இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய மக்களை அரசியல் மயப்படுத்தும் பணியில் அது பெரும் பங்களிப்பு செலுத்த முடிந்தது. சுதந்திரப் போராட்டம் கூட சென்று தீண்ட முடியாத அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் பிரக்ஞையை ஊட்ட அதனால் முடிந்தது. அச்சு ஊடகம் போன்றவை சென்று தீண்ட முடியாத அளவுக்கு தனிமைப்பட்டு கிடந்த எளிய மக்களை திராவிட இயக்கத்தின் பரப்பிய ஊடகங்கள் சென்று உசுப்பின. நிலப்பிரபுத்துவ மதிபீடுகளுக்குள் வாழ்ந்த அவர்களை ஜனநாயக அரசியல்கருத்துக்களுக்குள் கொண்டுவந்தன.

தமிழகத்தில் கோடிக்கணக்கானவர்கள் இருபதாம் நூற்றாண்டை உலுக்கிய மானுட சமத்துவம், அடிப்படை உரிமைகள், உரிமைக்கான போராட்டம் போன்றவற்றை எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் வழியாகவே அறிமுகம்செய்துகொண்டிருப்பார்கள். அவர்களின் அரசியல் பிரக்ஞை ஆரம்பிப்பதே அங்கிருந்துதான். ஆகவே தான் இன்றும் எளிய மக்களில் கணிசமானவர்கள் திராவிட இயக்கம் மீது பற்று கொண்டிருக்கிறார்கள். இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்தநாட்டில் இந்த ஜனநாயகப்படுத்தல் மிகவும் முக்கியமான ஒன்று.

4.தமிழ்மொழி என்னும் அடையாளத்தை தமிழகத்தின் பொது அடையாளமாக ஆக்கியது திராவிட இயக்கம்தான். மக்களுக்கு செம்மைமொழியை அது மேடைவழியாக அளித்தது. அதனூடாக மக்கள் அதிகாரம்பெறுவதற்கான ஒரு பெரிய வாயிலைத் திறந்தளித்தது. முதன்மையாக அதன் சாதனை இதுவே

இந்த நான்குமே திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்றே கூறுவேன். இவற்றுக்காக திராவிட இயக்கத்தை அங்கீகரிக்காமல் நான் எந்த விதமான விமரிசனத்தையும் கூறுவதில்லை. இவற்றின் அடிப்படையில் திராவிட இயக்கம் மீதான மதிப்பை முன்வைக்கும் ஆய்வுகளையும் நான் ஏற்கிறேன். பிற சூழல்களில் காங்கிரஸ¤ம் இடதுசாரி இயக்கங்களும் ஆற்றிய பணி இது. அவை பரப்பிய இயக்கங்கள் அல்லாத காரணத்தால் அப்பணி மெதுவாகவே நடைபெற்றது.

அனைத்தையும் விட முக்கியமான பங்களிப்பு ஒன்றுண்டு. ஆதரவு போலவே எதிர்ப்பும் ஜனநாயக இயக்கத்தில் முக்கியமானது என்று காட்டியது திராவிட இயக்கமே. பிரிட்டிஷ் அதிகாரம் காங்கிரஸ¤க்கு வந்தது. அந்த அதிகாரத்தை ஒருவகை மன்னராட்சியாகவே பிற பகுதிகளில் பெருவாரியானவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் அறுபதுகளில்கூட முன்வைக்கப்பட்டதுண்டு. ஆனால் அரசை விரும்பாதபோது தூக்கி வீச முடியும் என எளிய மக்களுக்கு திராவிட இயக்கம் கற்றுத்தந்தது. எதிர்ப்பு என்பது ஜனநாயக அரசியலின் அடிபப்டை செயல்பாடு என்றது.

பிற இடங்களில் அந்தப்பணியை ஆற்றியவை இடதுசாரி இயக்கங்கள். இடதுசாரி இயக்கங்கள் வலுவாக இல்லாத இடங்களில் சாதி இயக்கங்கள் இப்பணியை ஆற்றின. இவை தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வலுவிழக்கும் போது அந்த இடத்தை சாதி இயக்கங்கள் நிரப்புகின்றன என்று பார்க்கையில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு ஒருவகையில் ஆக்கபூர்வமானதும் முற்போக்கானதும்தான் என்றே எண்ணுகிறேன்.

தமிழகம் சாதி அரசியல் வழியாக அரசியல்மயமாக்கப்பட்டிருந்தால் மோதல்களும் வன்முறைகளும் உருவாகியிருக்கும். அது அழிவுப்பாதைக்கே நம்மை கொண்டு சென்றிருக்கும். அதன் அத்தனை குறைகளுடன் திராவிட இயக்கம் ஒரு ஜனநாயக இயக்கமாகவே இருந்தது. ஜனநாயக நடவடிக்கைகளுடன் தான் அது தன் அரசியலை முன்னெடுத்தது. அத்தனை விமரிசனங்களுடன் கூட திரு. மு. கருணாநிதி அவர்களை திராவிட இயக்கத்தின் கடைசி ஜனநாயகவாதி என்றே கூற வேண்டியிருக்கிறது. அவருக்குப் பதிலாக மூர்க்கமான சுயமைய நோக்குள்ள சாதிதலைவர்களே நமக்கு கிடைக்கிறார்கள் இன்று.

ஒரு வேளை திராவிட இயக்கத்திற்குப் பதில் இடதுசாரிகள் அந்தப் பணியை ஆற்றியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் ‘லாம்’ களுக்கு இடமில்லை. வரலாறு அதன் ஒரு பணியை நிறைவு செய்ய திராவிட இயக்கத்தை உருவாக்கியது. அவ்வளவுதான்.என் நோக்கில் இவ்வாறே திராவிட இயக்கத்தின் பங்களிப்பின் சாதக பாதகங்களை வகுத்துக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் திராவிட இயக்கத்தால் மழுங்கடிக்கப்பட்ட தன்னுடைய உரிமைக்குரலை மீட்டு தலித் இயக்கங்கள் முன்னகர கூடும். பிற்பட்டோர் அரசியலுக்கு மாற்றாக எழும் சக்திகள் திராவிட இயக்கத்தை உதறித்தானாக வேண்டும். அவையெல்லாம் வரலாற்று முரணியக்கத்தின் சாத்தியங்கள். அவற்றைப்பற்றி தீவிரமான கருத்துக்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. அந்த மாற்றம் எந்நிலையிலும் ஜனநாயகபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று மட்டும் கூற விழைகிறேன்.

நான் செயல்படுவது பண்பாட்டுத்தளத்தில். இங்கே திராவிட இயக்கம் என்ற பரப்பிய இயக்கத்தின் விளைவுகள்  எதிர்மறையானவை. . அதற்கு எதிர்நிலையில் அல்லாமல் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும் செயல்படவும்  வேறு வழியில்லை. அதுவே என் தரப்பாகும் . திராவிட இயக்கத்தின் எதிர்மறைக்கூறுகள் என நான் எண்ணக்கூடிய அனைத்துமே அது ஓரு பரப்பிய இயக்கம் என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. என் கருத்துக்களைச் சுருக்கி இவ்வாறு கூறலாம்.

1) பரப்பிய இயக்கம் எப்போதுமே சிந்தனைகளை கோஷங்களாக சுருக்கும் தன்மை கொண்டது. சிக்கலான ஊடுபாவுகளும் வரலாற்றுப் பின்புலமும் உடைய சிந்தனைகள் அதற்கு தேவையில்லை. எளிய ஒற்றைப்படையான உண்மைகளையே அது முன்வைக்கும்.  அதன் மூலம் சிந்தனைகள் மேலும் வளர்வதற்கான வழி அடைபடுகிறது. மூர்க்கமான நிலைபாடுகள் மட்டுமே உருவாகின்றன. இன்றைய சூழலில் நாம் சிந்தனைகளை வளர்க்கவும் முன்னெடுக்கவும் திராவிட இயக்கம் உருவாக்கிய இந்த மனநிலையை வென்றே ஆக வேண்டும்.

2) பரப்பிய இயக்கம் எப்போதுமே பாமர மக்களைச் சார்ந்தது. ஆகவே அது எல்லாவற்றையும் அந்த தளம் நோக்கி இழுக்கிறது. கலை இலக்கியங்களில் சீரிய முயற்சிகளை அது வரவேற்காது. கேளிக்கைகளையும் பரபரப்புகளையும் அது நாடும். திராவிட இயக்கம் வணிகக்கலையும் வணிக இலக்கியமுமே முக்கியமானது என்று தமிழ் மனதில் நிறுவி விட்டது. அந்த மனநிலையை உடைத்து ஆழத்தையும் நுண்மையையும் நிறுவியாக வேண்டும்.

3) பரப்பிய இயக்கம் எந்த ஒரு விஷயத்தையும் அர்ப்பணிப்புடன் நெடுங்காலம் நெடுந்தூரம் கொண்டு செல்வதில்லை. அதன் உடனடி பயன் முடிந்ததும் அதை அப்படியே விட்டுவிடும். தமிழியக்கத்தின் கனவுகளும் அப்படியே திராவிட இயக்கத்தால் கைவிடப்பட்டன. தலித் இயக்கம், இடதுசாரி இயக்கங்களின் இலட்சியங்களும் அவ்வாறே திராவிட இயக்கத்தால் கொஞ்ச நாள் மேடையில் முழங்கப்பட்டு கைவிடப்பட்டன. திராவிட இயக்க அரசியலில் இருந்து இந்த இலட்சியங்களை மீட்டு மீண்டும் உயிர்த்துடிப்புடன் முன்னெடுத்தாக வேண்டும்.

4) பரப்பிய இயக்கம் கவனத்தைக் கவரும் செயல்களை மட்டுமே முன்னிறுத்தும், அவ்வாறு கவனத்தைக் கவரும் மனிதர்களே அதன் நாயகர்கள். அர்ப்பணிப்பும் ஆழமும் கொண்ட அறிவியக்கம் அதற்கு ஒரு பொருட்டே அல்ல. ஆகவேதான் திராவிட இயக்கம் உண்மையான அறிஞர்களை புறக்கணித்தது. மேடைப் பேச்சாளர்களை முன்வைத்தது. விளைவாக காலப்போக்கில் மேடை பேச்சாளர்கள் பெருகினார்கள். ஆய்வாளர்கள் அருகினார்கள். ஆய்வாளரும் அறிஞரும் தேவையற்றவர்களாக உணரப்பட்டார்கள். இன்று திராவிட இயக்கத்தின் மனநிலையை முழுக்க நீக்கி நம் சமூகத்தில் அறிவார்ந்த செயல்பாடுகளுக்கும் ஆய்வுகளுக்கும் உள்ள முக்கியத்துவத்தை நிறுவியாக வேண்டும்.

5) பரப்பிய இயக்கம் வெகுஜன ஊடகங்களை மட்டுமே பொருட்படுத்தும். திராவிட இயக்கத்தின் ஊடகமாக சினிமா, மேடை இரண்டுமே இருந்துள்ளன. அது அடிப்படையில் எழுத்துக்கு எதிரான இயக்கம். இடதுசாரி இயக்கங்களுடன் திராவிட இயக்கத்தை ஒப்பிடும் எவரும் இதை உணரலாம்.  திராவிட இயக்கம் அதன் உச்சத்தில் இருந்த நாட்களில், சி.என்.அண்ணாத்துரை அவர்களின் ஒரு கூட்டத்துக்கே பல்லாயிரம்பேர் வந்த காலகட்டத்தில் அவரது இதழ்கள் சில ஆயிரம் பிரதிகளுக்குமேல் விற்றதில்லை என்பதே வரலாறு. அவரது நூல்கள் விற்பதில்லை என்பதை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்.

இந்தியாவின் எல்லா அறிவியக்கங்களும் பற்பல பெரும் நாளிதழ்களையும் பிரசுர அமைப்புகளையும் உருவாக்கியிருக்கின்றன. திராவிட இயக்கம் அப்படி பெரிய அமைப்புகள் எதையுமே உருவாக்கவில்லை. காரணம் அது எழுத்து வாசிப்பு சார்ந்தது அல்ல என்பதே. அதன் விளைவாகவே இன்றைய தமிழ் மனம் எழுத்து- வாசிப்பு இரண்டிலும் அக்கறையற்றதாக உள்ளது.. திராவிட இயக்கத்தின் பாதிப்பில் இருந்து மீளாத வரை அதை எழுத்து, வாசிப்புக்கு கொண்டு வரஇயலாது.

6) திராவிட இயக்கம் உருவாக்கிய எளிய பகுத்தறிவு வாதம் நம் மரபின் தொன்மையையும் ஆழத்தையும் புரிந்து கொள்ள உதவியானது அல்ல. இன்னும் சொல்லப்போனால் அது பெரிய தடையும் ஆகும். இன்னும் விரிவான வரலாற்று ஆய்வு முறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.  இந்தியச் சூழலில் இடதுசாரிகளும் அம்பேத்கார் முதலிய தலித்தியர்களும் விரிவான ஆய்வுமுறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவை திராவிட இயக்கத்தின் எளிமைப்பாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்படவேண்டும். அவற்றையும் தாண்டிச்செல்லும் புதிய சிந்தனைகள் வந்துசேர வேண்டும்.

7) ஒரு பரப்பிய இயக்கமாக திராவிட இயக்கம் பிரச்சாரத்தையே எல்லாவகையான அறிவுச் செயல்பாட்டுக்கும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. கலைப்படைப்பின் சவால்களும் சாதனைகளும் திராவிட இயக்கக் கருத்தமைவால் உள்வாங்கப்பட முடியாதவை. ஆகவேதான் ஒரே ஒரு கலைப் படைப்பினைக்கூட அது உருவாக்க முடியவில்லை. இலக்கியம் திராவிட இயக்கத்தின் பாதிப்பை முற்றாக உதறாதவரை கலையில் வெற்றிகளைச் சாதிக்க இயலாது.

ஆகவேதான் பண்பாட்டுச் செயல்பாட்டாளன், இலக்கியவாதி என்ற முறையில் நான் திராவிட இயக்கத்தை  நிராகரிக்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://do.jeyamohan.in/5782/

13 comments

Skip to comment form

 1. Ramachandra Sarma

  ஹம்ம்..புரிகிற‌து.ஒரு ப‌ர‌ப்பிய‌க்க‌த்தின் தேவை அதில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே அல்ல‌வே? அதிகார‌த்தை கைப்ப‌ற்றுத‌ல் என்ற‌ வ‌கையில் ஒரு ச‌மூக‌ மாற்ற‌த்தை உருவாக்க‌முடிந்தால் அது ப‌ர‌ப்பிய‌க்க‌மாக‌ இருப்ப‌தில் என்ன‌ த‌வ‌று? ம‌க்க‌ளை மாற்றுகிறேன் என்று கால‌ம் க‌ட‌த்துவ‌தை விட‌ அதிகார‌ம் கொடுங்க‌ள் நான் என‌க்குத் தெரிந்த‌வ‌ரை ந‌ல்ல‌து செய்கிறேன் என்று சொல்வ‌திலும் த‌வ‌றிருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை. த‌மிழ‌க‌த்தில் இத‌ற்கு என்ன‌தான் மாற்றாக‌ இருந்திருக்க‌ முடியும்? மாற்று என்று எதுவும் பெரிய‌ அள‌வில் இல்லையென்றே தோன்றுகிற‌து.

 2. maruthu

  Dear Mr sarma,
  Your assessment cannot be more wrong.The cure cannot be worse than the disease.In any case the kazhagams could never have been a cure.Infact dravida divisive concept is probably the worst disease TN could have contracted.Tamils and Tamilnadu has been paying and will continue to pay a very dear price for having nurtured dravida kazhagams..

 3. KannanV

  பரப்பிய இயக்கம் – நல்லதொரு சொல் தேர்வு, பரபரப்பு இயக்கமாகவும் கொள்ளலாம். மிக நல்லதொரு கட்டுரை.

 4. Ramachandra Sarma

  திரு.மருது, நான் சொல்வது, இதற்கு என்னதான் மாற்றாக இருந்திருக்கமுடியும்? ஒரு பரப்பியக்கத்தை மீறி சமூகத்தை ஒருங்கிணைத்த எலிடிஸ்ட்(elitist) இயக்கம் என எதுவுமே தோன்றவில்லையே? இதன் வளர்ச்சியை யாராலும் தடுக்கவும் முடியவில்லையே? ஏன்? பெரும்பான்மை மக்கள் இவ்வியக்கங்களால் சுலபமாக சுயலாபம் அடைந்ததாலா? இந்த இயக்கம் தோன்ற மேடையமைத்துக் கொடுத்தது எது? இவ்வியக்கத்திலிருந்து கிளைத்தார்களே ஒழிய இவ்வியக்கத்தை எதிர்த்து யாரும் நிற்கவில்லை. எனில் இதன் தேவை நிச்சயம் இருந்திருக்கவேண்டும். அந்த தளத்தை இது பயன்படுத்திக்கொண்டு, ஓரளவு நல்ல முறையிலேயே மக்களை கொண்டுசென்றுள்ளது. ஜெ வினுடைய விமரிசனம் இவ்வியக்கத்தின் கொள்கைகள், சமரசங்கள், மொழி மற்றும் ஆராய்ச்சியில் பங்களிப்பு என்ற ரீதியில் இருக்கிறது. ஆனால், அரசியல் மற்றும் நிர்வாகம் என்ற முறையில் இவ்வியக்கங்கள் செலுத்திய ஆளுமை போல மற்ற இயக்கங்களால் முடியவில்லை என்பதுதானே நிஜம். அரசியல் ஆதிக்கத்தால் அது ஒரு சாராருக்கு நன்மை புரிந்திருக்கிறது என்பதும் நிஜம். மாற்று இல்லாதபோது எதைவைத்து இவர்களை அளவிடுவது என்று தெரியவில்லை.

 5. Lakshmanan

  இலக்கியத்திலும் பண்பாட்டிலும் அரசியலிலும் சீரிய கொள்கைகளிருந்தும் சோவியத் நாட்டையம் சீனாவையும் மட்டுமே முன்னிறுத்தி காலியான வெற்று வார்த்தைகளை பரப்புரையாக மட்டும் கொண்டு நடைமுறை வாழ்க்கையில் பொன்னான நேரத்தை விரயமாக்கிய பொதுவுடைமை இயக்கத்தின் மிகப்பெரிய தோல்வியே இதற்கு முக்கிய காரனமாகும். மேலும் தமக்குள்ளே இடது வலது என்ற பிரிவினை வர்க்க பேதத்தில் ஈடுபட்டதும் ஒரு காரணம். இந்த இயக்கங்களில் இன்றளவும் அனைவரும் வறியனிலையில் உள்ள கொள்கைகள் மட்டுமே உண்மை என முழுமையாக நம்பும் தொண்டர்களாலும் தலைவர்களாலும் மட்டுமே இயங்குகிறது. ஜீவாவை விடவும் இலக்கிய அரசியல் பேச்சுத் திறமை திராவிடர்களுக்கு இருந்ததில்லை. வானமாமலை போன்ற னுன்கலை இலக்கிய வல்லுனர்களும் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. வெற்றிடம் இவர்களே உருவாக்கிய ஒரு வரலாற்றுத் தவறு. தமிழர்களின் பாவம்.
  லட்சுமணன். ஜெத்தா

 6. maruthu

  //ஆனால், அரசியல் மற்றும் நிர்வாகம் என்ற முறையில் இவ்வியக்கங்கள் செலுத்திய ஆளுமை போல மற்ற இயக்கங்களால் முடியவில்லை என்பதுதானே நிஜம். அரசியல் ஆதிக்கத்தால் //

  Dear Mr. Sarma,

  You can accuse the DMK of any thing.But I do not think that they can be accused of having the capacity to provide good governance.
  Their managerial skills end with seducing ignorant people with cinematic dialogues full of hatred on one hand and painting a fantasy on the other;just like how adolf hitler seduced the Germans.
  If you carefully analyse you will see that under kamraj and people like Kakkan,Venkatraman etc TN obtained the best governance in the last 60 years..But under Mu Ka other than vulgar ostentation and corruption one cannot see a semblance of good governance.But the language policy of congress and other emotive but non issues became the platform on which the great game of dravidian deception was perpetrated.

  But then just like Grrmans did, tamils will pay a very dear price for having let themselves to be seduced by patently evil and mediocre people of justice party lineage.

 7. ஜெயமோகன்

  Hello Sir,

  vanakam.

  how r u..

  could u refer the books for “thravidar khazaha valrchi” …

  i hope u refer the books that written with minimum biased.

  Endrum natpudan,
  Sivasankar M.S.
  அன்புள்ள சிவசங்கர்

  நானறிந்தவரை வரலாற்றுநோக்கில் , உண்மையான எல்லா தகவல்களையும் அளித்த, ஒரு திராவிட இயக்க வரலாறு எதுவும் இன்றுவரை தமிழில் எழுதப்பட்டதில்லை. ஆகவே எல்லா தகவல்களை எல்லா தரப்பில் இருந்தும் வாசிப்பதே சிறந்தது.

  உதாரணமாக முதல்நூலாக திராவிட இயக்க தன்வரலாறான முரசொலி மாறனின் திராவிட இயக்க வரலாறு நூலை வாசிக்கலாம். அதன் இடைவெளிகளையும் விடுபடல்களையும் பி.ராமமூர்த்தி போன்றவர்களின் சுயசரிதைகளைக்கொண்டு நிரப்பிக்கொள்ளலாம். இதுவே சாத்தியம்

  திராவிட இயக்கம் உருவாக்கிய தன்வரலாற்றில் உள்ள விடுபடல்கள், திரிபுகள், தவறுகள் குறித்து இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். நான் என் கட்டுரையில் சொன்ன கமலநாதனின் நூல் ஓர் உதாரணம்

  ஜெ

 8. Ramachandra Sarma

  அதை நல்ல நிர்வாகம் என்று சொல்லவில்லை. அவர்கள் அதை கைப்பற்றிய விதம், தக்கவைத்துக்கொண்டது சாதாரணமல்ல. அவர்கள் நிர்வாகம் அப்படி ஒன்றும் மோசம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். 30 ஆண்டுகளாக எதுவுமே நடக்கவில்லை என்பது சரியல்லவே?

 9. elango

  அன்புள்ள ஜெயமோகன் சார்,
  திராவிட இயக்கம் தான் செய்யாத சாதனைகளுக்கெல்லாம் உரிமை கோருவது தான் இங்கே கவனிக்க தக்கது. நீங்கள் ஒரு எழுத்தாளராக பண்பாட்டு செயல் மட்டுமே அளவுகோலாக பார்க்கிறீர்கள். ஆனால் அது மக்களை ஜனநாயகத்தில் இருந்து வெகு தூரம் தள்ளியே வைத்துள்ளது. அரசு அதிகாரிகள் தொடங்கி பொது மக்கள் வரை ஊழலை பொதுமை படுத்தியது தான் அதன் சாதனை. திரு மு கருணாநிதியை கருணாநிதி என்று பத்திரிக்கைகள் கூட குறிப்பிட முடியாது. இன்று மதுரையில் ஜனநாயகுத்க்க்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
  ஒரு ஜேன் ஞானியிடம் போய் கிறிஸ்தவ மிசனரிகள் சொன்னார்களாம், ‘மனிதனுக்காக இறைவன் உலகத்தில் அவதரித்துள்ளார்’ என்று. அவர் விழுந்து விழுந்து சிரித்தாராம். மிசனரிகள் அவர்குளுடைய விட முயற்சிக்கு பெயர் போனவர்கள் ஆயிற்றே. ” கடவுளின் குமரன் மனிதர்களுக்காக இரத்தம் சிந்தினார்’ என்று. ஞானி இன்னும் அதிக சதத்துடன் சிரித்தாராம். அவரின் சிறப்பை எப்படியாவது அடக்கும் பொருட்டு மிகவும் கடினமான முகத்துடன் சொன்னரகலம் ‘அவர் மீண்டும் வருவாரென்று புனித நூல்லில் இருக்கிறது’
  ஞானியின் சதம் அதிகமானது. சிரிப்பு அடங்கவே இல்லை.
  இபிட் பட்ட சோசலிச பிரச்சாரங்களை திராவிட இயக்கம் செய்யும் போதல்லாம், வரலாற்றை படித்தவர்களுக்கும், வெளி மக்களோடு பழகியவர்களுக்கும் தான் தெரியும், என்ன செய்துள்ளது திராவிட இயக்கம் என்பது.
  கல்வி கற்பதிலும் தொழில் முனைவதிலும் தமிழரின் ஆதி அனுபவமே இன்று வரை கை கொடுக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நமக்கும் மற்ற பண்பாட்டு இயக்கங்களுக்கும் ஏற்பட வேண்டிய நல்ல உறவைக் கூட நாம் இழந்து வந்துள்ளோம். அதிகாரம் கை மாறாமலேயே கூட சில கலாச்சாரங்கள் ஒடுக்கு முறையை சாதகமாக பயன் படுத்தி தங்களை வளப்படுத்தி kondullana.

 10. Ravisubramaniyan

  உங்கள் தர்க வாதங்களில் நியாயம் இருப்பினும் கூட, திராவிட இயக்க பங்களிப்பை நீங்கள் முற்ற முழுக்க அப்படி நிராகரித்து விட முடியாது என்பது என் அபிப்ராயம்.

  ஒரு வகையில் அடித்தட்டு மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் அது அதற்கு முன் இல்லாத அதிர்வுகளை நம்பிக்கையை தந்தது போன்ற சில சாதகமான விஷயங்கள் இல்லாமல் இல்லை.

  நமக்கு படிக்க கிடைக்கும் திராவிட இயக்க வரலாற்று புத்தகங்களில் இருந்து முழு உண்மைகளை கண்டறிந்து விட முடியாது என்ற உங்கள் கூற்று மெத்த சரி ஜெயமோகன்.

  சில வரலாற்று சம்பவங்கள் நடந்த நாட்களில் இருந்தவர்களில் சிலரை சந்தித்து பேசியவன் என்ற வகையிலும், அந்த நாளில் வந்த வேறு எதிர் கருத்துள்ள பத்திரிக்கை செய்திகளை மேடைப்பேச்சு பதிவுகளை உற்று நோக்கியவன் என்கிற வகையிலும் உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கத்தான் வேண்டியிருகிறது.
  ரவிசுப்ரமணியன்

 11. sankar.manicka

  @elango: what TN has achieved is not because of the government but in-spite of the government என்று சொல்கிறீர்கள். அது சரியாக இருக்க வாய்ப்பில்லை.
  அரசு தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருந்ததால் நாம் கொஞ்சம் முன்னேறியிருக்கிறோம்..உண்மை தான். ஆனால், அடிப்படை கட்டமைப்புகள் அமைய அரசு மிகவும் அவசியம்.
  சாலை, மின், நீர் வசதிகள் அரசு இல்லாமல் நாம் இன்றுள்ள நிலைக்கு வந்திருக்க முடியாது.

 12. kalyaanan

  அன்புள்ள ஜெ

  அருமையான கட்டுரை

  ஆனால் ஒரு விஷயத்தை சேர்க்க விரும்புகிறேன். திராவிட இயக்கத்தை இன்றுள்ள வகையிலே வெகுசன இயக்கமாக ஆக்கியதில் எம் ஜி ஆருக்கு உள்ள பங்கு மிக மிக முக்கியமானது. அவர் இல்லாவிட்டால் திராவிட முன்னேற்ற கழகமும் அண்ணாவும் அத்தனை பெரிய மக்கள்செல்வாக்கைஅ டைந்திருக்கவே முடியாது. அந்தக்கால பிரசுரங்கள் சினிமா விளம்பரங்கலை எல்லாம் பார்த்தாலே இது தெரியும். தம்பி ராமசந்திரா உன் முகம் மட்டும் போதும், எல்லா தொகுதியிலும் ஜெஇப்பேன் என்று அண்ணா சொன்னார். எம்ஜியார் பெரியார் அளவுக்கே அண்ணா அளவுக்கே திராவிட இயக்கத்தில் முக்கியமானவர். அவரது ஆதரவினால்தான் கலைஞர் பதவிக்கும் தலைமைக்கும் வர முடிந்தது. அவர் விலகியபோது மொத்த இயக்கமும் அவருடன் தான் சென்றது

  இப்போது திராவிட இயக்க வரலாறு பேசும் ‘ஆராய்ச்சியாளர்கள்’ எம்ஜியாரை திராவிட இயக்கத்தில் சேர்க்காமல் ஜாக்கிரதையாக எழுதுகிறார்கள். காரணம் திராவிட என்பது தமிழ் என்று மாறிவிடது. எம்ஜியார் மலையளி. இப்போது சில திராவிட இயக்க ஆராய்ச்சியாளர்கள் எம்ஜியாரை நடிகர் என்று இழகந்து திராவிட இயக்கத்தை ஒரு பெரிய கொள்கை இயக்கமாக காட்டுகிறார்கள். சிறந்த உதாரணம் எம் எஸ் எஸ் பாண்டியன்…

  இந்த பிழையை நாம் செய்யக்கூடாது. தப்போ சரியோ எம் ஜி ஆர் இல்லாவிட்டால் திராவிட இயக்கம் இல்லை. திராவிட இயக்கத்தில் எளிமையான மனிதர்கள் நம்பிய ஒரே தலைவர் அவர்தான்

 13. samyuappa

  ஆமாம்… என்னுடைய தாத்தாவை அண்ணாதுரை “என்ன நாயக்கரே” என்றுதான் கூப்பிடுவார். உத்திரமேரூர் வீட்டில் சாப்பிட்டபோது…. கறியை கடித்து உறிஞ்சி துப்பிவிடுவாராம். தெருகூத்து வாத்தியார் – என்பதால் தி மு க வை குக்கிராமங்களுக்கு கொண்டுசெல்ல என்னுடைய பாட்டனாரை பயன்படுத்திக்கொண்டார். என் பாட்டனார் தி மு க வை பயன்படுத்தியதே இல்லை, அண்ணாதுரைக்கு அப்புறம்.

Comments have been disabled.