«

»


Print this Post

மிஷனரிவரலாறு, மதம், கடிதங்கள்


அன்புள்ள ஜெ,

மிஷனரி வரலாறு என்ற ஒரு புதுச் சொல்லாட்சியை அளிக்கிறீர்கள். மிஷனரிகள் சொன்னவை எல்லாமே உள்நோக்கம் கொண்டவை என்று சொல்கிறீர்களா? அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க உங்களால் முடியுமா என்ன?

ஜான் செல்வா

அன்புள்ள செல்வா,

நான் மிஷனரி வரலாறு என்று சொல்வது அந்த வரலாறு குறித்த ஓர் எச்சரிக்கை தேவை என்பதனாலேயே. அந்த வரலாற்றெழுத்தில் உள்ள மிஷனரி பார்வையை கணக்கில் கொண்டே நாம் அந்த வரலாறுகளை வாசிக்க வேண்டும் என்பதனாலேயே

மிஷனரி வரலாற்றின் அடிபப்டைகள் இவை

1. உலகை கிறித்தவ மீட்பு கொண்ட பகுதி கொள்ளாத பகுதி என பிரிக்கும் இரட்டை நோக்கு.

2. கிறித்தவ மீட்பு கொள்ளாத பகுதி என்பது இருளடைந்ததாக ஞானமும் நாகரீகமும் அற்றதாக மட்டுமே இருக்க முடியும் என்ற நோக்கு

3. ஐரோப்பியமையவாதம். ஐரோப்பிய சமூக இழிவுகளை தீங்குகளை காணாமல் இருப்பது. பிற சமூகங்களில் உள்ள சமூக தீங்குகளைக் கண்டு நீதியுணர்ச்சி எழப்பெறுவது

4 தங்கள் அறிதலின் வட்டத்துக்குள், பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளர்கள் வழியாக, வந்த அறிதல்களையே முழுமையான தகவல்களாக எண்ணி முன்வைப்பது

இந்த குறைகளை கருத்தில் கொன்டபின் அவர்கள் சொல்லும் தகவல்களைப் பரிசீலிப்பதில் பிழை ஏதும் இல்லை

மேலும் இன்னொரு விஷயம். மிஷனரிகள் இரு நூற்றாண்டு முன்பிருந்த மனநிலையை வெளிக்காட்டியவர்கள். அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் எல்லாம் மிஷனரிகளின் நோக்கைப்பற்றிய விமரிசனங்களை அதிகாரபூர்வமாகவே ஏற்றுக்கொன்டார்கள். ஆனால் இந்தியாவில் இப்போதும் ஒரு மதவெறி குழுவினரால் மிஷனரி வரலாறு மூர்க்கமாக முன்வைக்கப்படுகிறது. அனைத்துவகையான ஊடக சாதனங்கள் மூலமும் பரப்ப படுகிறது

அறிவியல்நியதிகளுக்கும் அறநெறிக்கும் ஒத்துவராத இந்தப்போக்கை எந்த ஓர் அறிவுஜீவியும் நிராகரித்தே ஆகவேண்டும். நியாயத்தில் மனம் ஊன்றிய கிறித்தவ அறிவுஜீவிக்கு மேலதிக கடமை உண்டு. நான் ஒரு கிறித்தவ அறிவுஜீவியின் நேர்மையை அவர் இந்த விஷயத்தில் என்ன நிலைபாடு எடுக்கிறார் என்பதை வைத்தே மதிப்பிடுவேன்

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமொகன்
மெல் கிப்சனின் “அபகொலிப்டோ” படம் பார்த்திருக்கிறீர்களா? ஐரோப்பிய மிஷினரிகளின் வருகைக்கு முன்பான அமெரிக்க மாயன்  பண்பாட்டை பற்றிய படம். மிகுந்த நுடபத்துடனும் சினிமா அழகியலுடனும் எடுக்கப்பட்ட ஒரு படம். ஆனால் படம் முடியும் போது அதனுள் இருக்கிற அரசியல் பிடிபடும்.
மாயன் பண்பாடு முழுக்க முழுக்க காட்டுமிராண்டிப் பண்பாடு என்கிற ஒரு சித்திரம் தான் அதில் உள்ளது. மிஷினரிகளின் வருகை அவர்களை மாற்றியிருக்கும் என்கிற ஊகத்துடன் படம் முடியும். இதே சித்திரத்தை தான் இந்திய பூகோளத்திற்கும் மிஷினரிகள் உருவாக்க முனைந்தார்களோ?
நாம் இன்று அறிகிற தகவல்கள் கட்டிட கலை மற்றும் இயற்கை சார்ந்த நுண்ணறிவில் மாயன் பண்பாடு மிக ஆழமானது என்பது.
சந்தோஷ்
அன்புள்ள சந்தோஷ் 

அபாகலிப்டா மிக ஆபத்தான படம். உண்மையான ‘காட்டுமிராண்டிகளை’ நவீன
மனிதர்களாகச் சித்தரிக்கும் கிறித்தவர்களின் வழக்கமான
வெறுப்புப்பிரச்சாரம் அது. பக்கம் பக்கமாக மேலைநாட்டினரே அதைப்பற்றி
எழுதித்தள்ளிவிட்டார்கள்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்
ஓவியர் எம்.எஃப். ஹுசைன் பற்றிய உங்கள் பார்வை என்ன? அவருக்கு எதிராக மிகப்பெரிய காம்பைன் பண்ணிக்கொண்டிருக்கிற அமைப்பின் சுட்டியை கீழே தருகிறேன்.
அன்புடன்
சந்தோஷ்http://ensanthosh.wordpress.com/


சுருக்கமான ஒற்றைவரி– இந்துதாலிபானியம். இங்கே பாமியான் சிலைகளை விட ஆயிரம் மடங்குபெரிய சிலைகளை; கிருஷ்ணன் முதல் காந்திவரை வரிசையாக ஒரு பத்தாயிரம் ஞானிகளை; நிற்கவைத்துச் சுடுகிறார்கள்.
ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://do.jeyamohan.in/4237/

1 ping

  1. மதமெனும் வலை

    […] மிஷனரிவரலாறு- கடிதம் […]

Comments have been disabled.