«

»


Print this Post

சில மலையாளக் கவிதைகள்


குற்றவாளிகள்!

– கல்பற்றா நாராயணன் –

செய்தவர்களின் குற்றத்தை நிரூபிப்பது
பெரிய வேலையொன்றுமல்ல
அவர்கள் போகும் தூரத்துக்கு
எல்லையுண்டு
மறைத்துவைத்தவைக்கு அருகிலிருந்து
அவர்கள் விலகுவதில்லை
சில வேறுபாடுகள் இருந்தாலும்
அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்பது உறுதி
ஒன்றுமில்லாவிட்டாலும்
அவர்களுக்கு எல்லாமே தெரியும் அல்லவா?
செய்யாதவர்களால்தான் சிக்கலே
அவர்கள் ஒப்புக் கொள்வதேயில்லை
அவர்கள் பதுங்கி நிற்குமிடங்களில் தோண்டிப்பார்த்தால்
ஒன்றும் கிடைப்பதில்லை
எவ்வகையிலும் அவர்கள் ஒத்துழைப்பதில்லை
நிரபராதிகளைப்போல
கல்மனசுக்காரர்கள் வேறில்லை

நெடுஞ்சாலை புத்தர்!

– கல்பற்றா நாராயணன் –

நேற்று நான்
நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும்போது
புத்தரைக் கண்டேன்
சாயங்காலப் பரபரப்பில்
கடக்கமுடியாமல்
இப்பக்கம்
வெகுநேரமாக நின்றிருந்தேன்
ஐம்பதோ அறுபதோ எழுபதோ
வருட நீளமுள்ள இவ்வாழ்வில்
எப்படிப்பார்த்தாலும் ஒரு ஒன்றரைவருடம்
இப்படிக் கடக்கமுடியாமல்
காத்து நிற்பதிலேயே போவதை எண்ணியபடி
அப்போது ஒருவர்
சற்றும் தயங்காமல்
மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன்
அவரை பின்தொடர தொடங்குகையில்
ஒருவண்டி
குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது
எந்த வண்டியும்
அவருக்காக வேகத்தைக் குறைக்கவில்லை
இயல்பான
அகன்ற
தனித்த
எப்போதுமே அங்கிருக்கும் பாதையில்
அவர் நடந்து மறுபக்கம் சேர்ந்தார்

உலக வரைபடம்!

-கல்பற்றா நாராயணன் –

நான் பிறந்த நகரத்தைப் பார்க்கவேண்டுமென்றால்
உலக வரைபடத்தை பற்பல மடங்கு பெரிதாக்க வேண்டும்
என் கிராமத்தைப் பார்க்கவேண்டுமென்றால்
உலக வரைபடத்தை பலநூறுமடங்கு பெரிதாக்கவேண்டும்
நான் அமர்ந்து கனவுகாணும்
ஆற்றங்கரை பாறையைக்காண
உலகவரைபடத்தை பூமியளவுக்கே பெரிதாக்கவேண்டும்
பிறர் எவரும் கண்டிருக்காத
உன்னைப்பார்க்கவேண்டுஎம்ன்றால்
உலகவரைபடம் இப்பூமியைவிட பெரிதாகவேண்டும்
ஆனால் இதோ என் மேஜை மீது
சுழலும் ஒரு பூமிகோளம்

விழியின்மை!

– கல்பற்றா நாராயணன் –

விழியிழந்த நண்பரை பாதையோரம்
வெளியே நிற்கச்செய்து
கழிப்பறைக்குள் நுழைந்தேன்
விழியில்லாதவர் மட்டும்தான் அங்கே
ஏன் வாசலை மூடவேண்டும்?
ஆனால் கழிப்பறை வாசலை மூடியபின்பும்
எனக்கு ஏதோ ஒரு பாதுகாப்பின்மை
விழியிழந்தவரில் இருந்து
எப்படி மாறைந்துகொள்வது?

முற்றம்கூட்டுகையில்!

– அனிதா தம்பி –

கண்மூடி உறங்கும் வீட்டின்
மண் குவியல்கள் முளைத்த முற்றத்தை
கூட்டி நினைவுக்கு மீட்கையில்
முதுகு வலிக்கிறது காலையில்
சென்ற இரவில் நனைத்துச்
சென்றிருக்குமோ மழை?
மண்ணிளக்கி இரவெல்லாம் தூங்காது
மண்புழுக்கள் கட்டினபோலும் சிறுவீடுகள்
காலையில் ஒரு பெண்ணின்
பின்னோக்கிய அடிவைப்பின் நடனம் முடிந்தபின்
ஈர்க்குச்சி விரல் கீறல்வரிகள்
மட்டுமென உடைந்து பரவி எஞ்ச…

நட்சத்திரங்களென எண்ணியது…

– பி பி ராமச்சந்திரன் –

நட்சத்திரங்களென எண்ணியது
உற்று நோக்கி விரிந்த
உளவுக்கண்கள் என்று……
இயற்கைக் கொந்தளிப்பென எண்ணியது
எவருடையவோ பெருமூச்சுதான் என்று…..
விடுதலை விடுதலை
என்று கூவி ஓடிய இம்மைதானம்
ஏதோ பேருருவத்தின்
உள்ளங்கைதான் என்று……..

இன்மையின் ஓலம்!

– பி பி ராமச்சந்திரன் –

தொலைவிலிருந்து கேட்டேன்
கவிஞன் பாடிய
கல கல ஓசை
அருகே சென்றபோது
அசைவின்றிக் கிடந்தது
கடவில்லை தோணியில்லை
முட்டுவரை என நினைத்த இடத்தில்
கணுக்கால் நனையவில்லை
நடுவே போகும்வரை
காலடி நக்கி
சவலை ஓட்டம்
தொடர்ந்து வந்தது
பிறகு அதுவுமில்லை
விலகிசெல்லும்போது
பின்னால் முழங்கிக் கொண்டிருந்தது
நுரையும் குமிழியுமாக
இன்மையின் ஓலம்

நியாயப்படுத்தல்!

– பி ராமன் –

நியாயப்படுத்தல்தான்
உன் வளர்ப்புமிருகம்
உன் செயலே
அதன் உணவு
அந்தருசியைவிட்டு
அது எங்கும் போகாது
நாளை நீ அழிந்தாயென்றால்
அதைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை
உன் வாரிசு
என்ற நிலையில்
எப்படி நான் நிறைவேற்றுவேன்?

உலர்தல்!

– வீரான்குட்டி –

தளிர்விட்ட காலம்
நினைவிலிருக்கும்
எவ்விலையும்
மனம் நெகிழ்ந்து
வேண்டுதல்செய்யும்
பச்சைக்கு முந்தைய பாலியம்
கடவுளோ
அப்போது கைவசமிருக்கும்
மஞ்சளோ நரைச்சிவப்போ
உடனே அனுமதிப்பார்
மரங்களின் இலைகளுக்குள்
காலம்
உலர்ந்து வற்றுவதின்
மணமிருக்கும்
அப்போது காடெங்கும்

திண்ணையும் உம்மாவும்!

– வீரான்குட்டி –

புதுவீட்டின்
திண்ணையிடம்
உம்மாவுக்கு உள்ள பிரியம்
எனக்கு இல்லை
இரவில்
கதவுகள் மூடிய பிறகு
வெளியே
திண்ணை
குளிர்ந்து சிலிர்த்து
தனித்துக் கிடக்குமே
என்று உம்மா
அடிக்கடி திறந்துபார்ப்பாள்
காலையில்
அவசரமாக
திறந்து போகும்போது
பால்பொட்டலங்கள்
செய்தித்தாள்
இரவு பிறந்த பூனைக்குட்டி
காற்று வீசிய
சருகுகள் ஆகியவற்றை
மடியில் வைத்து
புன்னகைத்து அமர்ந்திருக்கும் திண்ணை
மெல்லிய துணியால்
துடைத்து
உம்மா
திண்ணையை சுத்தம் செய்வாள்
மதியவெயிலில்
துணிவிரித்து
ஒட்டிப்படுப்பாள்
உம்மா
சமையலறையில்
தனித்து
தன்னில் ஆழ்ந்து
வேலைசெய்யும்போது
வாசல் கடந்து
சத்தமின்றி
உள்ளே போய்
அவளைத்தொடும் அது
ஜின்னுகளையும்
மலக்குகளையும்
கனவுகண்டு
உம்மா தூங்கும்போது
இரவில்
மெல்லவந்து தொட்டு
எழுப்பி
புற உலகம் காணாத
அவளை
படிகளில் இறக்கி
வெளியே கூட்டிச்செல்லுமோ அது?

அடாடா!

– அன்வர் அலி –

நாம் இறந்தது
ஒரு மணிநேரத்தின் இரு எல்லைகளில்
முதலில் நான்
இருள்யானைமீதேறி
நரகம் சென்றேன்
பிறகு நீ
சூரியனின் தேரில்
சொற்கம்
ந்ரகத்திலெனக்கு
ஆத்மாக்களை
அறையில்தள்ளும் வேலை
சொர்க்கத்தில் உனக்கு
ஆத்மாக்களை
கூட்டிப்பெருக்கும்வேலை
ஒரேஇடத்தில் இருந்தோமென்றால்
வேலைஅவசரத்துக்கு நடுவேஓரிருமுறை நாம்
பார்க்கவாவது செய்திருக்கலாம்
அடாடா

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://do.jeyamohan.in/341/

Comments have been disabled.